இந்த உலகத்தையே ஆளும் அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். முனிவரிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். முனிவர், மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன் அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.
அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.
குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.
ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.