வெள்ளைத் தங்கம், நார்ப்பயிர்களின் அரசன் என்றழைக்கப்படும் பருத்தியானது தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், கோவில்பட்டி,எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் முக்கிய பணப் பயிராகும். பருத்தியானது பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் பயிரிட்டாலும் சில சமயங்களில் அதிக மழைப்பொழிவு,கடும் வறட்சி போன்ற காரணங்களால் சரியான மகசூல் எடுக்க முடியாத சூழ்நிலை ஒரு பக்கம் இருந்தாலும் நுண்ணூட்டக் குறைபாடு காரணமாக சரியான மகசூல் எடுக்க முடிவதில்லை.இதனை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது TNAU பருத்தி பிளஸ் என்ற நுண்ணூட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா அகிலாண்டபுரம் கிராமத்தில் விவசாயிகளின் வயலுக்கு நேரடியாக சென்று பல்வேறு வேளாண்மை தொடர்பான ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்த பருத்தி பிளஸ் நுண்ணூட்டத்தை பயிருக்கு பயன்படுத்துவதால் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும். விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும்.காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழி வகுக்கும். கோடை காலங்களில் வறட்சியை தாங்கும். இந்த நூண்ணூட்டத்தை ஏக்கருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இதனுடன் தேவையான அளவு ஒட்டுத்திரவம் சேர்த்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
இந்த பருத்தி பிளஸ் நுண்ணூட்டத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் கல்லூரிகள்,வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பெற்று பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம் என தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.