கிருஷ்ணா கதைகள் || Lord krishna story
இந்த பூமியில் மனிதர்களின் பாவ மூட்டைகள் மலை கணக்கில் பெருகி போனதால் (தாவரங்கள், மிருகங்கள், தண்ணீர், காற்று மற்றும் அவர்களையே அழித்து வரும் மனிதர்களின் பாவங்கள் இதில் அடக்கம்), அதனை தாங்க முடியாத பூமா தேவி, நிலைமை மோசமாவதற்குள் விஷ்ணு பகவானின் உதவியை நாடினார். இந்து சமயத்திரு நூல்களின் படி, இதுவே கிருஷ்ண பரமாத்மா அவதரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது. அவர் அவதரித்ததற்கு முக்கிய காரணமாகவும் இது கருதப்படுகிறது.
கம்சனின் சபதம்
கம்சன் என்ற வடிவில் தீய சக்தியாக வாழ்ந்து வந்தவன் மதுராவை ஆண்டு வந்த கொடுங்கோல் மன்னன். தீய சக்தியின் உச்சத்திற்கே சென்றது கம்சன் செய்த பாவங்கள். அப்போது கம்சனின் சகோதரியான தேவகியை வாசுதேவன் திருமணம் செய்யும் நாள் வந்தது. திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு தெய்வீக குரல் இதனை கூறியது “வாசுதேவன் மற்றும் தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய்”. இதனை கேட்டு கோபத்தின் உச்சியை அடைந்த கம்சன் உடனடியாக தன் வாளை உருவி தேவகியை கொல்ல முற்பட்டான். இருப்பினும் தன் மனைவியின் உயிரை பறிக்க வேண்டாம் என வாசுதேவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவளை உயிருடன் விட்டு வைத்தான். அதற்கு பிரதிபலனாக தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக அவன் வாக்களித்தான். அவர்களை கூர்ந்து கவனிக்க அவர்கள் இருவரையும் சிறை வைத்தான் கம்சன்.
கிருஷ்ணனின் பிறப்பு
அந்த தம்பதிக்கு ஒவ்வொரு குழந்தை பிறந்த போது, ஒவ்வொருவரையாக கொலை செய்தான் கம்சன். 7 ஆவது குழந்தையை கொன்ற பிறகு, இதனை கண்டு பயந்த அவர்கள் தங்கள் எட்டாவது குழந்தையை காக்குமாறு விஷ்ணு பகவானிடம் மன்றாடினார். ஒரு இரவு வாசுதேவனின் கனவில் வந்த விஷ்ணு பகவான், அவரின் தீவிர பக்தனான நந்தா என்ற மாடு மேய்ப்பாளரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுமாறு கூறினார். தனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை அதே தினத்தில் பிறக்க போகும் நந்தாவின் பெண் குழந்தையுடன் மாற்றிக் கொள்ள வாசுதேவனுக்கு அவர் உத்தரவிட்டார்.
விஷ்ணு பகவானின் திட்டம்
வாசுதேவனுக்கு பிறந்த எட்டாம் குழந்தை வேறு யாரும் அல்ல; விஷ்ணு பகவானின் அவதாரமே அக்குழந்தை. அக்குழந்தை பிறந்ததும் தானாக திறந்த கொண்டது சிறைச்சாலை கதவுகள். மேலும் கட்டிபோட்டு வைக்கப்பட்டிருந்த வாசுதேவனின் கயிறுகள் தானாக விடுவித்துக் கொண்டது. அதனுடன் சேர்ந்து இடியுடன் கூடிய பேய் மழை பெய்தது. தன் குழந்தையை நந்தாவிடம் எடுத்துச் சென்ற போது வாசுதேவனுக்கு நதிகள் பாதையை அளித்தது. வாசுதேவன் தன் ஆண் குழந்தையை நந்தாவிடம் ஒப்படைத்த பின்பு, நந்தாவிற்கு அன்று பிறந்த பெண் குழந்தையுடன் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பினான் வாசுதேவன். நடந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் கம்சனுக்கு தெரியவில்லை.
தேவதையாக மாறிய நந்தாவின் குழந்தை
நந்தாவின் பெண் குழந்தையை கொல்ல கம்சன் சென்ற போது, திடீரென தேவதையாக மாறிய அக்குழந்தை “உன்னை கொல்லப்போகும் குழந்தை ஏற்கனவே இந்த அண்டத்தில் வேறு எங்கோ பிறந்து விட்டது. உன்னை கொள்வதற்கான வயதை அது எட்டும் வரை அது யார் என்பதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது” என கம்சனிடம் கூறியது. இது கிருஷ்ணரின் பிறப்பிற்கு பின்னால் இருக்கும் சிறிய கதை. மேலும் இந்த கதையானது இந்து இதிகாசத்தில் உள்ளபடி விளக்கப்பட்டுள்ளது.