மந்திர கதைகள்

மந்திர பொம்மை! || Magical Stories

சோலைவனம் கிராமத்தில் வசித்த ரவி, கடின உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து சம்பாதித்துவந்தார். யாருக்கு என்ன உதவி என்றாலும் ஓடிவந்து உதவி செய்வார். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை, இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.

ரவியைப் பற்றிக் கேள்விப்பட்ட துறவி ஒருவர் சோலைவனம் கிராமத்துக்கு வந்தார். அவரைச் சந்திக்க ஏராளமானவர்கள் வந்தனர். ஆனால், ரவி மட்டும் வரவில்லை. தான தர்மம் செய்யக்கூடிய ரவி ஏன் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று துறவிக்குக் குழப்பமாக இருந்தது.

மூன்றாவது நாள் மாலை, துறவியைப் பார்க்க வேகமாக ஓடிவந்தார் ரவி.“துறவியாரே, தாமதமாக வந்து உங்களைச் சந்தித்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும். மூன்று நாட்களாக அறுவடை. மூச்சுவிடக் கூட நேரம் இல்லை. மாலையில் வடக்கு வீதியில் ஒரு பெரியவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

அவரைக் கவனிக்க யாரும் இல்லை என்பதால், அங்கு சென்றுவிட்டேன். இன்றுதான் அவர் குணமானார். உங்களைக் காண நேரம் கிடைத்து. இன்று என் வீட்டில் தாங்கள் உணவருந்த வேண்டும்” என்று அன்புடன் கூறினார் ரவி.

“நானே உன்னைச் சந்திக்க விரும்பினேன். இன்று நீயே வந்துவிட்டாய். வேலைதான் முக்கியம். உழைப்புதான் உயர்வைத் தரும். அதேபோல் ஒரு பெரியவரைக் கவனித்ததும் முக்கியமான விஷயம். இரவு உன் வீட்டில் தங்குகிறேன்” என்றார் துறவி.

ரவி மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார். சற்று நேரத்தில் துறவியும் வந்தார். அவரை நன்கு உபசரித்து, தேவையான அனைத்தையும் செய்துகொடுத்தார் ரவி. துறவியின் மனம் மகிழ்ந்தது. ஊரைச் விட்டுச் செல்லும் அன்று, ஒரு மந்திர பொம்மையை ரவியிடம் கொடுத்தார்.

“ரவி, தினமும் ஒரு முறை இதை வணங்கி, மாதம் ஒருமுறை என் கையில் உள்ள மண்ணைப் பொன்னாக மாற்று என்று சொன்னால், 3 தங்க நாணயங்கள் கிடைக்கும். இதை உன் உழைப்புக்குப் பரிசாகத் தருகிறேன். பெற்றுக்கொள். மகிழ்ச்சியாகவும் பிறருக்கு உதவி செய்தும் வாழ்க்கையை நடத்து” என்றார் துறவி.

நன்றி சொல்லி, பொம்மையை வாங்கிக்கொண்டார் ரவி. தினமும் அந்தப் பொம்மையை வணங்கினார். ஒரு மாதத்துக்குப் பிறகு, துறவி சொன்னதைப் பரிசோதனை செய்து பார்க்க நினைத்தார்.

“மந்திர பொம்மையே, என் கையில் உள்ள மண்ணைப் பொன்னாக்கு” என்று சொல்லி முடித்ததும், மூன்று தங்க நாணயங்கள் வந்தன. ரவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மூன்று தங்க நாணயங்களை வைத்துக்கொண்டு ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்தார். பணம் தீர்ந்ததும் மீண்டும் பொம்மை மூலம் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார்.

திடீரென்று இந்தப் பொம்மையை யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்றியது. மிகவும் பாதுகாப்பான இரும்புப் பெட்டி ஒன்றை வாங்கி, அதில் பொம்மையைப் போட்டுப் பூட்டி வைத்தார். ஆனாலும் திருப்தி இல்லை. பெட்டி அருகிலேயே இருந்தார். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர், உழைப்பையே மறந்துவிட்டார்.

வேலை செய்யாமல் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்ட ரவியின் உடல் நலம் பாதித்தது. இதைப் பார்த்து அவரது நண்பர் வேலு வருந்தினார். மந்திர பொம்மையைப் பற்றியும் அறிந்துகொண்டார். அன்று இரவு ரவி தூங்கும்போது வீட்டுக்குள் நுழைந்தார். மந்திர பொம்மைக்குப் பதிலாகச் சாதாரண பொம்மையை வைத்துவிட்டார்.

மறுநாள் காலை கண் விழித்ததும் மந்திர பொம்மையை எடுத்தார் ரவி. வணங்கி, மண்ணைப் பொன்னாக மாற்றும்படிக் கேட்டார். ஆனால், மண் பொன்னாகவில்லை. அதிர்ச்சி அடைந்தார்.

“ஐயோ… திடீரென்று மந்திரம் வேலை செய்யவில்லையே… இனி நான் என்ன செய்வேன்? ஒருவேளை நாளை வேலை செய்யலாம்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

ஒரு மாதம் ஆகியும் மந்திர பொம்மை வேலை செய்யவில்லை. இனி மந்திர பொம்மையால் பலன் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். உணவுக்கு வழியில்லாமல் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்தார். உடல் ஒத்துழைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய ரவியாக மாறினார். கடினமாக உழைத்தார். எல்லோருக்கும் உதவினார்.

வேலு மந்திர பொம்மையுடன் வந்தார். ”ரவி, என்னை மன்னித்துவிடு. உழைக்காமல் உடல் வேதனைப்படும் உன்னைக் குணமாக்கவே இந்தப் பொம்மையை எடுத்துச் சென்றேன். உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது என்பதை உணர்ந்திருப்பாய். உழைத்தால் நோயின்றி மகிழ்ச்சியாக வாழலாம். உன் மந்திர பொம்மையை வைத்துக்கொள்” என்றார்.

”ஐயையோ… எனக்குப் பொம்மை வேண்டாம். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். இதைத் துறவியிடமே கொடுத்து விடுகிறேன்” என்றார் ரவி.

அங்கு வந்த துறவி, ”உழைப்பாளியான உன்னை இந்தப் பொம்மை சோம்பேறியாக்கிவிட்டதே! நல்லவேளை வேலுவால் நீ திருந்திவிட்டாய். இனி என்றென்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். உழைப்பால் இன்னும் உயரமான இடத்துக்குச் செல்வாய். இந்தப் பொம்மையை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்