நடுவுநிலைமை பொருந்த, எவரிடத்துமே செல்வம் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல, மேலும் கீழுமாகச் சுற்றிசுற்றி இடம் மாறிக்கொண்டே போகின்ற இயல்பினை உடையது அது. அதனால், எருமைக் கடாக்களை நடத்திப் போரடித்துப் பெற்ற நெல்விளைவாகிய, குற்றமற்ற பெருஞ்செல்வமானது விளைந்து தோன்றிய காலத்திலே, அதனை எவருக்கும் தராமல் சேமித்துப் பூட்டி வைக்காதீர்கள். அது கிடைத்த காலந்தொடங்கி, அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்ற அறநினைவுடன், பலரோடும் கூடிப் பகிர்ந்து உண்பீர்களாக!
