ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.
ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”
இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.
“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.
பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”
பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.
அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.
“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.