சுற்றுலா

முன்னுரை

மனிதன் தான் வாழும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்று, தங்கி, மகிழ்ந்து, புத்துணர்வு பெற்று திரும்புதல் சுற்றுலாவாகும். இந்நிலையில் ‘சுற்றுலா’ என்னும் சொல், சுற்றுலாவின் வகைகள், காலந்தோறும் சுற்றுலாவின் மாற்றங்கள், பன்னாட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகளில் சுற்றுலாவின் தாக்கம், சுற்றுலாவும் பன்னாட்டு வாணிகமும், விடுதிகள், பயணப் பணிநிறுவனங்கள்,வழிகாட்டிகள், பயண ஆவணங்கள், சுற்றுலாவினால் ஏற்படும் தீமைகள், சுற்றுலாத் தலங்கள், சுற்றுலா மேம்பாடு அடைய செய்ய வேண்டுவன பற்றிய செய்திகள் ஆகியன குறித்து இக்கட்டுரையில் காண்போம்.


சுற்றுலா என்னும் சொல் பற்றிய விளக்கங்கள்
சுற்றுலா என்னும் சொல் பற்றிக் கலைக்களஞ்சியங்களும் அறிஞர்களும் தரும் விளக்கம் பற்றி அறிவதற்கு முன்பாக, ‘சுற்றுலா’ எனும் சொல் எவ்வாறு உருவாயிற்று என்னும் வினா எழுகிறது. ‘Tour’எனும் ஆங்கிலச் சொல்‘TORNUS எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. டோர்னஸ் என்றால் சக்கரம். எனவே, இச்சொல் சுற்றி வருவதைக் குறிக்கிறது என்பது தெளிவு. “இன்பப் பொழுது போக்கிற்காகப் பயணம் மேற்கொள்ளுதல் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுற்றுலா மேற்கொள்ளுதல் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தல் முதலிய பணிகளைச் செய்யும் தொழிலகம் சுற்றுலா எனப்பெறும்” என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.


சுற்றுலா என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் தரும் விளக்கம்
சுற்றுலாவின் கூறுகளைப் பற்றி அறிஞர்கள் பலவாறு குறிப்பிட்டுள்ளனர். புர்கட்டு, மெட்லிக் போன்ற அறிஞா்கள். “சுற்றுலா என்பது ஒரு பயணியின் குறுகிய காலப் பயணமாகும். அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வர். அவர்கள் பிற இடங்களில் தற்காலிகமாகத் தங்குவர்”.

மேலும்,ஜோவியக் என்பார் “ஓய்வெடுப்பதற்காவும், பொழுது போக்கிற்காகவும் கலாச்சாரத் தேவைகளைப் நிறைவு செய்வதற்குமான ஒரு சமுதாய இயக்கம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர்.


சுற்றுலாப் பயணியர் பற்றிய செய்திகள்
“மனமகிழ்ச்சிக்காவும், இன்பப் பொழுது போக்கிற்காகவும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்பவன் சுற்றுலாப் பயணி ஆவான்” என்று ம. இராசசேகர தங்கமணி குறிப்பிடுகின்றார்.

உலகச் சுற்றுலாக் கழகம்,“ஒரு நாட்டில் குறைந்த அளவு 24மணி நேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி என அழைக்கப்படுவார்”. ஏ.கே. நார்வல்

“எவரொருவர் எவ்விதக் குறிக்கோளும் இன்றி, தனது நாட்டின் எல்லையைக் கடந்து பிறநாட்டில் தற்காலிகாமாகத் தங்கி, தான் எங்கோ ஈட்டிய பணத்தை அங்குச் செலவிடுகிறாரோ அவரே சுற்றுலாப் பயணி ஆவார்” என்ற சரியான விளக்கத்தைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணியர்களை, இன்பச் சுற்றுப் பயணிகள், பொழுது போக்குப் பயணிகள், விடுமுறை பொழுது போக்குவோர், வழித்தங்கல் பயணி, எல்லை கடப்போர் என்று குறிப்பிடலாம்.

சுற்றுலாவின் வகைகள்
சுற்றுலா தற்காலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ளது. அது நாட்டிற்கு அந்நியச் செலவாணியை ஈட்டி, செலுத்துதல் சமநிலையை உருவாக்குவதால், அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்துகின்றன. இந்நிலையில் சுற்றுலாவின் நோக்கம், தன்மை, இடம், தூரம், பயன்பாடு இவற்றின் அடிப்படையில் சுற்றுலா பலவகையாகப் பகுக்கப்படுகின்றன. அவை, உள்நாட்டு – வெளிநாட்டுச் சுற்றுலா, தனிநபர் – குழுச் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சமூகச் சுற்றுலா, தொழில் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, அரசியல் சுற்றுலா, ஓய்வுச் சுற்றுலா, பருவ காலச் சுற்றுலா, விடுமுறைச் சுற்றுலா, விளையாட்டு மற்றும் துணிகரச் சுற்றுலா, சமய ஆன்மிகச் சுற்றுலா, சங்கச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, கடற்கரைச் சுற்றுலா ஆகியன.


காலந்தோறும் சுற்றுலா
பயணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் உணவு தேடிக் காடு மேடெல்லாம் அலைந்தான். பிற்கால மனிதன் திரைகடலோடியும் திரவியம் தேடினான். இன்றைய மனிதன் இன்பம், இறைத்தேடல், பொழுதுபோக்கு, அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம். மேலும், பயணங்களின் வரலாற்றைப் பண்டைய காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்றாகப் பகுக்கலாம். கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் பண்டைய காலம் என்றும், 12ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை இடைக்காலம் என்றும், அதற்குப் பிறகு தற்காலம் என்றும் பாகுப்படுத்தலாம்.

அ. பண்டைய காலம்

பண்டைய கால மனிதன் உணவு தேடவும், பொருளீட்வும், புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கல்விக்காவும், பழஞ்சுவடிகளைத் தேடியும், ஓர் இடம்விட்டு மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தான். உலகில் வணிகத்தின் பொருட்டு அவ்வாறுப் பல நாடுகளுக்குப் பயணம் செய்தமையினால் பொனீஷியர்களே இன்றைய பயணத்தின் முன்னோடிகள் எனலாம். இவர்கள் மத்திய தரைக்கடற் பகுதியில் பயணம் செய்து பல பண்டங்களைக் கிழக்காசிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றனர்.

பண்டைய காலத்தில் கிரேக்கர், உரோமானியர், சீனர், பொனீஷியர்கள் போன்ற பலரும் தமிழகத்துடன் வாணிகம் புரிந்துள்ளமை பல சான்றுகளால் உறுதிப் படுத்தப்படுகின்றது. ‘பெரிப்ளுஸ்’ என்னும் நூலில், தமிழகத்திற்கு வந்திறங்கிய மேலை நாட்டுப் பொருள்களையும், இங்கிருந்து மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்ற பொருள்களையும் பற்றி செய்திகளை அறிமுடிகிறது.

பண்டைய காலத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனப் பயணிகள் பாகியான், யுவாங் சுவாங், இத்சிங் மற்றும் கிட்சிஸ் ஆவா்.

ஆ. இடைக் காலம்

உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலமே ஐரோப்பாவில் இடைக்காலம் என்று கருதப்பட்டது. இடைக்காலத்தைப் பக்தி காலம் என்றும் ஆன்மிக ஆர்வம் மிகுந்த காலம் என்றும் குறிப்பிடலாம். இக்காலக் கட்டத்தில் கிறித்தவ சமயப் போதகர்களின் முயற்சியாலும் இடைக்காலத்தில் பயணங்கள் வளர்ச்சிப் பெற்றன.

இடைக்காலத்தில் இந்தியாவில் பயணம் மெற்கொண்டவர்கள். பெஞ்சமின் டுடேலா, இபின் படூடா மற்றும் மார்க்கோபோலோ ஆகியோர் சிறந்தவர்கள்.

இ. தற்காலம்

கி.பி.18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி மனிதவாழ்வின் பல்வேறு நிலைகளிலும் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. இங்கிலாந்து தொடங்கி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பரவிய இப்புரட்சி, தொழில் நுட்பச் சாதனையால் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் விளைவாகத் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணி (இரயில்பாதை) தொடங்கப்பட்டது. இந்தத் தொடர்வண்டியின் பயணத் தொடக்கம் சுற்றுலாவின் வளர்ச்சி வரலாற்றில் ஒரு ‘மைல்கல்’ ஆகும்.

பன்னாட்டுப் பொருளியல் செயல்பாடுகளில் சுற்றுலாவின் தாக்கம்
சுற்றுலா ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றது. அதுவே, பன்னாட்டு வாணிகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரச் செயல்பாடாக உள்ளது. அந்நியச் செலவாணியை ஈட்டித் தந்து, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய உதவுவதும் சுற்றுலாவே ஆகும். இது தனிமனித வருமானத்தையும், தேசிய வருமானத்தையும் பெருக்குகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் பல நாடுகளின் ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் சுற்றுலா, வருமானத்தை ஈட்டித் தருகின்றது. இவ்விதமாகச் சுற்றுலாவின் மூலம் வருமானம் வளரும் நாடுகளின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது. எனவே, பன்னாட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகளில் சுற்றுலாவின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.


சுற்றுலாவும் பன்னாட்டு வாணிகமும்
உலகில் பல்வேறு வகையான நாடுகள் உள்ளன. இவற்றில் சில நாடுகள் இயற்கைவளம் கொழிக்கும் நாடுகளாக இருந்தாலும், சில பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படத்தான் செய்கிறது. எனவே, அப்பொருளை இறக்குமதி செய்ய மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டுடிய நிலை ஏற்படுகிறது.

பன்னாட்டு வாணிகம் என்றால் என்ன?

தொழில்வளம்மிக்க நாடுகள் பல, அத்தொழிலுக்கான கச்சாப் பொருளை வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் மேம்பட்டு விளங்கினாலும் அந்நாடு தமக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் இறைச்சியையும் கச்சாப் பொருள்களையும் பிறநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கின்றது. எனவே, பன்னாடுகளுக்கிடையில் ஏற்றுமதி இறக்குமதி மூலம் நடைபெறும் பொருள் பரிமாற்றத்தையே பன்னாட்டு வாணிகம் என அழைக்கிறோம்.

வாணிகச் சமநிலை

ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மொத்த மதிப்பும், பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களின் மொத்த மதிப்பும் சமஅளவில் இருந்தால் அதனை பன்னாட்டு வாணிகச் சமநிலை என்கிறோம்.

அதேநிலையில் ஒருநாட்டின் ஏற்றுமதிப் பொருள்களின் மொத்த மதிப்பு, இறக்குமதி பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பின் அதனை சாதகமான வாணிகச் சமநிலை என்கிறோம். அதற்கு மாறாக ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதிப் பொருள்களின் மொத்த மதிப்பு கூடுதலாக இருப்பின் அதனைப் பாதகமான வாணிகச் சமநிலை என்கிறோம்.

விடுதிகள்
சுற்றுலா மையம் சிறப்புமிக்கதாக அமைந்திடின் அதனைக் காண வெளியூரிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்கள் வசதியாகவும் சொகுசாகவும் ஓய்வெடுக்கத் தேவையான தங்குமிடம் அல்லது விடுதிகள் அவ்விடத்திலிருத்தல் அவசியம். ஆகையினால், சுற்றுலா முன்னேற்றத்திற்குத் தங்குமிடங்கள் மிகவும் முக்கியம். அதனால்தான் தங்குமிடத்தைச் சுற்றுலாவின் முதுகெலும்பு என்று குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட தங்கும் விடுதிகள் பண்டைய காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. பயணியரும் வழிப்போக்கரும் தங்குவதற்குச் சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே பயணிகள், திருடர்கள் பயமின்றித் தமது உடமைகளைப் பாதுக்காப்பாக வைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கி.பி.15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகளில் மிகுதியான விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் இலண்டனில் கி.பி.1774இல் ‘டேவில் லோ’ என்பவர் தற்காலத்தில் காணப்படும் உணவகம் போல முதன்முதலாக விடுதியைத் தோற்றுவித்தவர் ஆவார். இதுதான் இலண்டனின் ‘முதல் விடுதி’ என்ற பெயரையும் பெற்றது. அன்றுமுதல் இன்று வரை விடுதிகள் வணிக விடுதிகள், தங்கள் விடுதிகள், பொழுதுபோக்கு விடுதிகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் என்று பலநிலையில் வளர்ச்சி பெற்றுள்ளன.

மேலே கண்ட விடுதிகள் மட்டும் சுற்றுலாவைச் சிறப்புடையதாக மாற்றிவிட முடியாது. ஒருநாட்டின் வணிக வளர்ச்சிக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் போக்குவரத்து இன்றியமையாதது. மக்களையும் பொருட்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லப் போக்குவரத்து வழிகள் தேவைப்படுகின்றன. இதை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர் . அவை, நிலம், நீர் மற்றும் ஆகாயம் எனப்படும்.
பயணப்பணி முகமை
சுற்றுலா வளர்ச்சியில் பயணப்பணி முகமை பெரும் பங்கு வகிக்கிறது. சுற்றுலாக்களை நடத்துவதும் ஊக்குவிப்பதும் வளர்ப்பதும் இதன் முக்கியப் பணிகளாகும். ஒரு நாட்டிலுள்ள சுற்றுலா மையங்களின் சிறப்புகளைப் பயணிகளுக்கு எடுத்துக்கூறிச் சுற்றுலாவில் ஈடுப்படுத்திச் சுற்றுலா செம்மையாக நடைபெறத் துணைபுரியும் அமைப்பே பயணப்பணி முகமையாகும்.

தாமஸ்குக் என்பவர் கி.பி.1841இல் முதல் பயணப்பணி முகமையைத் தொடங்கினர் இவர் முதன்முதலாகச் சில பயணிகளை இங்கிலாந்திலுள்ள லைசெஸ்டரிலிருந்து லாப்போருக்குத் தொடர்வண்டி மூலம் அழைத்துச் சென்றார். அத்தோடு மட்டும் இல்லாமல் தொடர்வண்டி பயணத்தில் சுற்றுலாப் பயணிக்கு 25சதவீதம் கட்டணச் சலுகை பெற்றுத் தந்தவர். இவர் தமது பயண அனுபவத்தை ‘லீவர்புர் பயணக் கையேடு’ என்னும் நூலாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 1860இல் புகைவண்டி, விடுதி அட்டைகளைப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

சுற்றுலா வழிகாட்டிகள்
சுற்றுலாப் பயணத்தின் வெற்றி முழுக்க முழுக்கச் சுற்றுலா வழிகாட்டியின் பொறுப்பில்தான் உள்ளது. அப்படிப்பட்ட நல்ல வழிகாட்டி பிறநாட்டு மொழிகள் அறிந்தவராகவும் பன்மொழியறிந்தவராகவும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வெளிநாட்டுப் பயணியர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கூறுவதோடு அல்லாமல் தெளிவான மொழி நடையில் பேசஇயலும். மேலும், சுற்றுலா மையத்தின் பண்பாட்டுத் தன்மை, வரலாற்றுப் பெருமை, மலர்ந்த முகத்துடனான பேச்சு, நகைச்சுவை போன்ற பண்புகள் பயணிகளைத் திருப்திப்படுத்தும்.


பயண ஆவணங்கள்
பண்டைய காலங்களில் மக்கள் நாடு விட்டு நாடு செல்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிப் பயணங்கள் மேற்கொண்டனர். இன்று ஒவ்வொரு நாடும் அரசியல், சமயம், இனம், மொழி ஆகிய காரணங்களுக்காக அயல் நாட்டினர் தமது நாட்டில் நுழையத் தடை விதிக்கத் தொடங்கியது. பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது.

1963ஆம் ஆண்டு ஐ. நா. சபை அயல் நாட்டுப் பயணியர்கள் பிற நாடுகளுக்குச் செல்வதில் உள்ள தடைகளை நீக்குதல் குறித்து விவாதித்து, அதன் விளைவாக ஒவ்வொரு நாடும் எதிரி நாட்டு ஒற்றர்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவிவிடாமல் காக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில தடைகளை விதித்துள்ளது. இதன் விளைவாகச் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஏற்படுத்திப் பயண இசைவுச் சீட்டு, விசா, நுழைவு விசா, கடந்துசெல்லும் விசா, சுற்றுலா விசா, குடியேற்ற விசா போன்ற ஆவணங்களைப் பெற்று அயல்நாட்டுச் சுற்றுலாவை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.


தமிழ் இலக்கியத்தில் பயணங்கள்
தொடக்க நாள்முதலே மனிதன் வாழ்வில் பயணங்களைத் தொடங்கி விட்டான். இது பண்டைய மனிதன் வாழ்வோடு இரண்டறப் பின்னிப்பிணைந்துள்ளது. இந்நிலையில் தமது பயண அனுபவங்களைப் பிறரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதியனவே பயண இலக்கியங்கள் எனலாம். இப்படிப்பட்ட பயண இலக்கியங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

1. அரசியல் பயணம்

2. கலைப்பண்பாட்டுப் பயணம்

3. ஆன்மிகம் தொடா்பான பயணம்

4. கல்வி மற்றும் தொழில் நுட்பப் பயணம்

5. பெரியோரைக் காணச் செல்லும் பயணம்

இலக்கியத்தில் பயணச் செய்திகள்

தொல்காப்பியர் தொடாத துறைகளே இல்லை. பயண இலக்கிய செய்திகளைப் பொருளதிகாரத்தில் ஆற்றுப்படையின் இலக்கணத்தில் குறிப்பிட்டுள்ளார். “பரிசில் பெற்ற ஒருவன் பரிசில் பெறத்துடிக்கும் ஒருவனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலைக் காண வழிகாட்டுதல்” என்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

புறநானூற்றில் 68, 69, 70, 105ஆம் பாடல்களில் பயணங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அவை கடலில் செல்லும் போதும், பாசறைக்குச் செல்லும் போதும் பெண்கள் உடன் செல்வதில்லை என்றும்; பொழில் விளையாடல், பூம்புனல் ஆடல் ஆகியவற்றிற்கு மட்டும் பெண்களை அழைத்துச் சென்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் தன் மனைவியுடன் மலைவளம் காணச் சென்றதையும், மாடலன் என்போன் தமிழகத்திலிருந்து வடநாட்டிற்கும் தெற்குப் பகுதியில் உள்ள குமரித்துறையில் நீராடிச் சென்ற செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாவினால் ஏற்படும் தீமைகள்
சுற்றுலாவினால் மனிதநேயம், தேசிய ஒருமைப்பாடு, நல்லெண்ணம், உலக ஒற்றுமை ஆகியன மலர்ந்தாலும். சுற்றுலாவினால் தீமைகளும் உண்டாகின்றன. எவ்வாறு என்றால் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் வரலாற்றுச் சின்னங்களைத் தொட்டும், சிலர் ஓவியங்களைத் தடவிப் பார்ப்பதாலும், தமது பெயரைப் பொறிப்பதாலும் கலைப்பெருமை அழிகிறது.

அதிகளவு பயணிகள் வருகையினாலும் வாகனங்களால் ஏற்படும் மாசும், சுற்றுப்புறச் சூழலும் சீர்கேடு அடைகிறது. பலதரப்பட்ட பயணிகள் ஒன்றுசேரும் இடங்களில் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

உயிரினங்களின் சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது. அரியவகைத் தாவர இனங்களும், செடிகளும் பாதிப்படைகின்றன. சிலர் நல்ல மூலிகைகளை மிதித்து விடுவார்கள். எனவே, பயணியரின் கட்டுப்பாடற்ற நடத்தைத் தாவர வளர்ச்சியைப் பரிதும் பாதிக்கின்றது.


இந்தியச் சுற்றுலாத் தலங்கள்
இந்திய நாட்டின் தலைநகரம் தில்லி ஆகும். இங்கு இரும்புத்தூண், குதுப்மினர், செங்கோட்டை, பாராளுமன்றம், இந்தியாவாயில், மற்றும் தேசிய அருங்காட்சியகம் முதலானவை உள்ளன.

உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால். மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ கோயில்கள், மும்பை, கீழ்த்திசையின் உரோம் என அழைக்கப்படும் கோவா, இளஞ்சிகப்பு நகரம் எனப்படும் ஜெய்ப்பூர், சென்னை, பெங்களுரு, கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாழிடங்கள் போன்றவையாகும்.


முடிவுரை
சுற்றுலா மனிதவாழ்வுடன் இணைந்து, பிணைந்து சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தையும், உலக மக்களிடையே நல்லெண்ணங்களை வளர்க்கிறது. ஒரு நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெருக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறது. இது இன்று வளர்ந்துவரும் தொழில் ஆகும்.

0
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்