முன்னுரை:-
“கல்லுதல்” என்பதற்குத் தோண்டுதல், வெளிக்கொணர்தல் என்பது பொருள். அறியாமை என்ற அகக்களையை வேரறுத்து, அறிவு என்ற ஒளிச்சுடரை அறுவடை செய்வதே கல்வியாகும். மனிதன் உயிர் வாழ்வதற்கு நீரும் உணவும் அவசியமானது போல், நமது அறிவை வளர்க்கவும், எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளவும் கல்வி அவசியம். “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்கின்றது ஆத்திசூடி. அதாவது இளமையில் கல்வியை நன்றாக கற்கும்போது அக்கல்வியானது நம்மை உயரிய இடத்திற்கு இட்டுச் செல்லும், உயர்ந்த பதவிகளை பெற்றுத் தரும் என்பது பொருளாகும். கல்வியின் மூலம் வாழ்க்கையில் மேன்மை அடைய முடியும். அத்தகைய கல்வியின் சிறப்பை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கல்வியின் சிறப்பு:-
இன்றைய உலகில் கல்வி மிகவும் முக்கியமானது. கல்வி ஒரு மனிதனின் அறிவைத் திறக்கும் திறவுகோலாகும். கல்வியின் சிறப்பினைத் திருவள்ளுவர் “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என வலியுறுத்துகின்றார். கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிற்து. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற” என்கிறார் பொய்யாமொழி புலவர். அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். இது கல்வியின் சிறப்பை தெளிவாக காட்டுகிறது. மற்ற செல்வம் நிலையற்றது, நமக்குள் அறியாமையை உருவாக்குகிறது, ஆனால் கல்வி என்பது அறிவொளியை உருவாக்கும் அழியாத செல்வம்.
கல்வியின் முக்கியத்துவம்:-
கல்வி நம் வாழ்க்கையை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த கருவி. கல்வி ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை வழங்குகிறது. கல்வி ஒழுக்கத்தை போதித்து, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. ஒருவர் குழந்தைப் பருவத்தில் கற்கத் தொடங்கி, வாழ்நாள் முடியும் வரை கற்கலாம், அதற்கு எல்லையே இல்லை. கல்விதான் மனிதனை முழுத் திறனுள்ள மனிதனாக மாற்றுகிறது. மனித நாகரிக வளர்ச்சிக்கு கல்வியின் வளர்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவரின் திறமையை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக மாற்றுகிறது. கல்வி ஒரு மனிதனை மேம்படுத்துவதோடு அவனது சமுதாயத்தையும் நாட்டையும் மேம்படுத்துகிறது. கல்வியின் நோக்கம் அறிவு, ஒழுக்கம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை ஒருவருக்கு புகட்டுவது. நம் அச்சத்தை போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வியே ஆகும்.
முடிவுரை:-
“கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக” என்கின்றுது திருக்குறள். நாம் கல்வியைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. நாம் கற்ற கல்விக்கேற்ப நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
உலகின் மதிப்புமிக்க மற்றும் அழியாத செல்வமான கல்வியை அடைய நாம் பாடுபட வேண்டும். கல்வி பெறுவது அனைவரின் உரிமை. கல்வியை சிறுவயதில் இருந்தே உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் ஆர்வத்துடன் கற்க வேண்டும். பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.