சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நமது சமூகம் பாதுகாப்பாக பயணிக்கவும் விபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாம் அனைவருக்கும் மிகவும் அவசியமாக உள்ளது. எண்ணற்ற மக்களை இணைக்கும் பாலமாக சாலைகள் இருக்கின்றன. சாலைகள் நமது வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக விளங்குகின்றன. அவை தூரத்தை குறைப்பதோடு பயணங்களை இலகுவாக்குகின்றன. சாலைகளில் விபத்துகளின்றி விழிப்புணர்வுடன் பயணம் செய்வது அவசியம். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் உலக அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது சாலைவிதிகளை பின்பற்றாமல் இருப்பதாலேயே நடைபெறுகிறது.
மனிதனது அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் அவசியமானது போக்குவரத்து. நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகும்.
சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கிறது. இதற்குப் பல காரணங்களை சொல்லலாம். சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு இல்லாமை, கவனச் சிதறல், விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைச் சொல்லலாம். சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும்.
மனிதர்களின் அலட்சியம் மற்றும் அவசரத்தால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் வண்டியை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பலருக்கு வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரிவதில்லை. இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும்.
சாலை விதிமுறைகள்
சாலை விதிகள், சட்டங்கள் என்பவற்றை கடைபிடித்து மற்றவர்களுக்கும் இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். சாலை பாதுகாப்புக்காக அரசாங்கம் பல விதிகளை விதித்துள்ளது. விதிகளை சரியான வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்காகப் போக்குவரத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
வாகன சாரதிகள் குறியீட்டுச் சமிக்ஞைகளைப் பார்த்து வாகனத்தை செலுத்தி செல்ல வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுடனும் குறிப்பிட்ட வேகத்தினைத் தாண்டாமலும் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும். சாரதி அனுமதி அட்டையை கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.
பாதசாரிகள் மஞ்சள் கோட்டில் ஊடாகவே கடப்பது அவசியமாகும். பாதையில் பாதுகாப்பற்ற வளைவு வழிகளினூடாகக் கடப்பதனைத் தவிர்க்க வேண்டும். போன்ற பல்வேறுபட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகள் காணப்படுகின்றன.
முடிவுரை
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்கின்ற அனைவருக்கும் நன்மை பயக்கும். எனவே சாலை விதிகளை மதிப்போம் நமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்தி கொள்வோம்.