சிகப்பு கூன் வண்டுகள் தாக்கிய தென்னை மரங்களில் நடுக்குருத்து வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும்.நன்றாக வளர்ந்த ஓலைகள் வைரம் போன்ற வடிவில் வெட்டுக்கள் காணப்படும்.நடுக்குருத்தின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் உண்ணப்பட்ட நார்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.காண்டாமிருக வண்டுகள் தாக்குதலுக்கு உள்ளான மரங்களை இந்த வண்டுகள் எளிதில் தாக்குகின்றன. எனவே காண்டாமிருக வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.காய்ந்த மற்றும் சேதம் அடைந்த மரங்களின் பகுதிகள் மற்றும் இறந்த மரங்களை அகற்றி அழித்து வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கவேண்டும்.மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்த வரை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து இவ்வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.மட்டை இடுக்குகளில் காணப்படும் கூன் வண்டுகளைப் பிடித்து அழித்துவிட வேண்டும். மரத்தின் குருத்துப் பகுதிகளிலும் மற்றும் மேலுள்ள மூன்று மட்டைகளில் அடிப்பகுதியிலும், இரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு வேப்பங்கொட்டைத்தூள் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடுவதால் இப்பூச்சியின் முட்டை இடுவது தடுக்கப்பட்டு, தாக்குதலைக் குறைக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ அல்லது கள் 2.5 லிட்டர் + அசிடிக் அமிலம் 5 மில்லி + ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் இவற்றுடன் முப்பது தென்னை மட்டைகளை நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கி சேர்த்து தோப்புகளில் வைத்து கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.கூன் வண்டுகளைக் கவர்ந்து ஈர்க்கும் பெரோலியூர் எனப்படும் இனக்கவர்ச்சி பொறிகளை 2 எக்டருக்கு ஒன்று வீதம் தோப்புகளில் வைத்து வண்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கவும்.
கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க தோப்பைத் துப்புரவாக வைப்பது மிகவும் அவசியம்.வேர் மூலம் மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 10 மில்லி + 10 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 3 தடவைச் செலுத்தவும்.மருந்து செலுத்த மரத்தின் அருகில் ஆழமாக குழி எடுத்து புதிய வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.வேரை ஒரு பகுதியில் வெட்டி, பூச்சிக் கொல்லி கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியை ஒரு பாலித்தீன் பையில் இட்டு, வேரை இந்த கரைசலின் உள்ளே விடவும்.
பின் இந்தப்பையை நூலால் இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.
24 மணி நேரத்திற்கு பிறகு, கரைசல் உறிஞ்சப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.இந்த முறை பொதுவாக நோயின் தாக்கம் மிக அதிகமாகும் போது, மரம் உயிர் வாழ முடியாத நிலையை அடையும் போது மட்டுமே இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என சேர்மராஜா விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் பயிரில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான விவரங்களுக்கு 9344532096 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
