தற்போது விவசாயத்தில் பயிர் சாகுபடியில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது .அதனால் நம் மண் வளம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.மண் வளத்தையும் மனித குலத்தையும் பாதுகாக்க இயற்கை சூழ்நிலைக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளோம்.இந்த வகையில் இயற்கை படைப்பான அசோலாவை நாம் வளர்த்து அதிக பயன் பெறலாம்.
அசோலாவானது நீரில் மிதக்ககூடிய பெரணி வகையினைச் சார்ந்த தாவரமாகும். அசோலா கூட்டு வாழ்வு முறை மூலமாக நீல பச்சை பாசி உதவியுடன் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண் நலம் மற்றும் மண் வளத்தை அதிகரிக்கிறது. அசோலா களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. அசோலா இரசாயன நைட்ரஜன் உரங்கள் பயன்படுத்தபடுவதால் ஏற்படும் இழப்பைக் குறைக்கின்றது.
அசோலா உயிர் உர தொழில்நுட்பம் எளிய, பொருளாதார செலவு குறைந்த மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை அளிக்க கூடிய தொழில்நுட்பமாகும்.அசோலாவை பயிர்ப் பருவ காலங்களில் வளர்க்கும் போது எக்டருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை பயிருக்கு வழங்குகிறது. இந்த அசோலாவை நெல் பயிரிடையே வளர்ப்பதால் களைகளை கட்டுப்படுத்தலாம்.அசோலாவை கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
அசோலாவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நல்ல முறையில் சினை பிடிக்கும். பாலின் அளவும் தரமும் அதிகமாகும். மேலும் பயிர்களுக்கு தேவையான இயற்கை உயிர் உரங்கள் தயாரிக்கவும் அசோலாவைப் பயன்படுத்தலாம்.இவ்வாறு பல பயன்களை கொண்ட அசோலாவை சிமென்ட் தொட்டிகள் ,சில்பாலின் பைகள் போன்றவைகளில் நிழல் பாங்கான இடங்களில் வளர்க்கலாம் என தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் மாணவன் சேர்மராஜா விவசாயிகளுக்கு அறிவுருத்தினார்.