தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியில் மானாவாரி பயிர்களுக்கு அடுத்த சாகுபடியாக அதிக மகசூல் தரும் பழப்பயிரான மாமரமானது சொட்டு நீர்ப்பாசன முறையில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாமரங்களில் பூக்களைப் பூக்க வைப்பதும் மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் பாதுகாப்பதும் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதில் பூக்கும் அனைத்துப் பூக்களும் காயாக மாறுவதில்லை.பொதுவாக மாமரங்களில் பூக்கள் உதிர்வு அதிகமாக இருக்கும்.காரணம் என்னவென்றால் சரியான பராமரிப்பு இல்லையென்றால் பூக்கள் உதிர்வு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா அகிலாண்டபுரம் கிராமத்தில் விவசாயிகளின் வயலுக்கு நேரடியாக சென்று பல்வேறு வேளாண்மை தொடர்பான ஆலோசனை வழங்கி வருகிறார்.
மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கள் பூக்கின்றன.
மாம்பூக்கள் இயற்கையாகவே உதிராமல் இருந்தால் ஒரு சதவீதம் தான் மரங்களில் இருக்கும். ஏதேனும் பூச்சி ,நோய் தாக்குதல் அல்லது சத்து குறைபாடு இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும். இதனால் காய் மகசூல் பெருமளவில் குறையும். மரத்தில் பூக்கும் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறாது.இயற்கையாக மரங்கள் எவ்வளவு பழங்களை கிளையில் தாங்குமோ அந்த அளவுக்கு தான் காய்கள் பிடிக்கும்.
மரங்கள் பூ பூக்க நாப்தலின் அசிட்டிக் அமிலம் 20 பிபிஎம் என்ற அளவில் தெளிக்கவும் அல்லது 0.5% யூரியா (ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் ) அல்லது 1% பொட்டாசியம் நைட்ரேட் (ஒரு லிட்டர் நீருக்கு10 கிராம் ) என்ற அளவில் பூ பூத்தலை தூண்டுவதற்கு தெளிக்கலாம்.
இயற்கை முறையில் மா மரங்களுக்கு கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும்.
இயற்கை வளர்ச்சியூக்கியான அரப்பு மோர் கரைசலை 10 லிட்டர் நீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிக அளவிலான பூக்கள் பிஞ்சுகளாக மாறும்.பூக்கள் பூக்க ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் ஊட்டமேற்றிய ஜீவாமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலக் கரைசலை தண்ணீரில் கலந்து விடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும் என தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.