அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்கள்

முன்னுரை:-

எழுவது முதல் விழுவது வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருப்பதில் எட்டுணையும் ஐயமில்லை. விழித்தவுடனேயே தேவைப்படும் நீர் முதல் உறக்கத்தின் போது தேவைப்படும் கொசு, மூட்டைப்பூச்சி நீக்கிவரை விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இல்லாமல் எந்த நாளும் கழிவதில்லை. இவற்றின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பல்கிக் கொண்டே செல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக இப்பொழுது விரிவாகக் காண்போம்.

நீர்:- வெளியில் செல்வது, பல் துலக்குவது, முகம் கழுவுவது,நீராடுவது, துணி துவைப்பது, பாத்திரஙகள் துலக்குவது, அரைப்பது, கரைப்பது, சமைப்பது இப்படி தொடர் பணிகள் அத்தனைக்கும் நீர், குளிர்நீர், வெந்நீர் போன்றவைகள் தேவைப்படுவதால் அவற்றிற்குரிய விஞ்ஞான சாதனங்களின் தேவையும் அவற்றின் பயன்பாடும், அவை குறையுடையவையாயின் அவற்றை செப்பம் செய்யும் முறைகளும் நாம் அறிந்திருப்பது இன்றியமையாததாகும்.

உண்டி:- சிற்றுண்டி, பேருண்டி எதுவாயினும் அவை கலப்புணவாக, சரிவிகித உணவாக, ஊட்டம் மிக்கதாக, உண்ணத்தக்கவையாக, உடலுக்கு ஊறு விளைவிக்காததாக, காலத்தால் அளவாக பசித்து புசிப்பதாக, வலிமை சேர்ப்பதாக, நோய்களுக்கு காரணம் இல்லாததாக, வயதுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் தக்கதாக அமைய அறிவியல் அறிவு இன்றியமையாததாக அமைகின்றது.

உடை:- மானங்காப்பதாக, தளர்வோ, இருக்கமோ, மிகுதியாக இல்லாததாக, தட்பவெப்ப நிலைகளால் குளிர் நடுக்கமோ, வெப்ப வியர்வை மிகையோ உடலில் தோன்றா வண்ணம் அமையும் உடுப்புக்கள், எளிதில் தீப்பிடிக்காத, சீக்கிரம் உலர்ந்து விடுவதாக அந்தந்த சமயங்களுக்கு ஏற்ற உடுப்புக்கள், பருத்தி பட்டு, கம்பளி போன்ற வகைப்பாடுகள் அறிந்து உடுத்த அறிவியல் மிகப் பயன்பாடு மிக்கதாகும்.

உறையுள்: –கூரையோ தளமோ சிறு பெரு சந்துகல் அற்றதாக கசிவு இல்லாததாக ஓதம் அற்றதாக இதே குறைகள் சுவர்களில், தரைகளில் இல்லாததாக, பலகணிகள், கதவுகள் தேவைப்படும்போது திறக்கவும், தேவை இல்லாத போது நன்கு மூடவும் தக்கவையாக, ஊதக்காற்று உள்வராததாக, கொசு, பூச்சிகள் போன்றவை வீட்டிற்குள் நுழையாதபடி பாதுகாப்பானதாக அமைய, வந்துவிட்டால் நீக்குவதாக இவற்றை அறிந்து செயல்பட அறிவியல் பெரிதும் தேவைப்படுகிறது.

மின் சாதனங்கள்:- தூசு நீக்கி, ஈரம் அகற்றி, ஒட்டடை போக்கி போன்றவை பயன்படுத்தாத இல்லங்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து மாதற்கும், பணியாட்களுக்கும் தேவையானதாகவும், அவை குறையுடைத்தாயின் அவற்றை செப்பம் செய்யும் முறைகள் அறிதல் இவை அறிவியல் அன்றாடம் பயன்படுத்தலின் நிலையைப் பெரிதும் உணர்த்தும்.

மருந்து:- நோய் வருமுன் காக்கவும், வந்த பின் போக்கவும், இன்று வீரிய மருந்துகள், பக்க விளைவுகள் ஏற்படுத்தாவண்ணம் புதிது புதிதாய் தேவைப்படுகின்றன.புதிய நோய்கள் பல்கியதாய்ப் படை எடுக்கின்றன.மருத்துவர் கற்காப் பிணிகள் பற்பல தோன்றி அவர்களையே அச்சுறுத்துகின்றன. மனிதனின் புறத்தும் அகத்தும் உள்ள உறுப்புகட்கு தனித்தனியே நுணுகிக் கற்ற வைத்தியர்கள் இன்று பற்பலர். பிறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்து, இறப்பு விகிதத்தை நன்று குறைத்திட பலரும் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளை சமுதாயம்
முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

தோட்டக்கலை, உழவு:- வித்து முளைக்க, துளிர் விட,பூக்க,காய்க்க, பழுக்க,பூச்சி, புழு அரிப்பு அணுகாது காக்க அறிவியல் அன்றாட வாழ்வில் பெரிதும் தேவையாகிறது. ஊட்டமுள்ள கீரைகள், காய்கள், பழங்கள், காய்கறிகள் நாம் பெற்றுப் பயன்பெற விஞ்ஞானம் தேவையாகிறது.

தொழில்:- எந்தத் தொழிலானாலும் அதைச் சார்ந்த தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் தேவைக்கு அறிவியல் துணை நிற்க வேண்டும். திறன் மிக பொருள்கள் உற்பத்தி பெருக, குறுகிய கால்ம் குறைந்த செலவில் தரமான கண்டு முதல் கண்டு பொருளாதார வளர்ச்சி பெற அறிவியலாலர்களின் நுண்ணறிவு, தொடர்முயற்சி, புதிய கண்டுபிடிப்புகளின் அணிவகுப்பு இவற்றிற்கு விஞ்ஞானத்தின் பயனபாடு தொடர்ச்சியான, இன்றியமையாத தேவையாக அமைகின்றது.

இசை, இசைக்கருவி:- கவலையை மறக்க, மகிழ்ச்சி அடைய இசை, மெல்லிசை,இன்னிசை, கருவி இசை, பஜனை, கர்நாடக இசை, காலட்சேபம், ஹரிகதை, வில்லிசை, கீழ்நாட்டு மேல்நாட்டு இசைக்கருவிகள், இசைத்தட்டு, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்,நாட்டியம், நுண்கலைகள், சின்னத்திரை, நாடகம் இவற்றிற்கு தேவைப்படும் கருவிகள் காண விஞ்ஞானம் தேவை.

தகவல் அறிய:- செல்பேசி, தொலைபேசி, கணினி,மடிக்கணினி, மின்னஞ்சல், வலைப்பூ, தினசரிகள்,வாரம் மும்முறை,இருமுறை,ஒருமுறை, மாதம் மும்முறை,இருமுறை,ஒருமுறை, காலாண்டு, அரையாண்டு இதழ்கள், ஆண்டுமலர்கள், சிறப்பு நாட்கட்கான மலர்கள் இவைகளை நாம் பெற்றுத் துய்க்க பல கருவிகள், இயந்திரங்கள் தேவைக்கு அறிவியலை நாம் துணை கொள்ள வேண்டும்.

ஓய்வு:- ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழித்து மன நிறைவு பெற, மகிழ மகிழ்வூட்ட, பலருடன் கலந்து அனுபவிக்க, மழலைகளோ, மூத்து முதிர்ந்தோரோ, ஆடவரோ, மாதரோ எத்திறத்தார் என்றாலும் ஒள்ரிவனவும், வெளிச்சம் தருவனவும், புழுக்கம் போக்குபவையும் அறிவியலின் கொடைகளே!

சுற்றுச் சூழல்:- சுற்றுச் சூழலின் தட்ப வெப்பத்தை சமனப்படுத்தத் தேவையான இய்ந்திரங்கள் இன்றீயமையாதவை ஆகின்றன. அவற்றைப் பெற அறிவியல் பெரிதும் தேவையாகிறது. நம்முடைய தேவைக்கு வசதிக்கு தேவைகள் பற்பல. இவை இன்றைய நவீன சூழலில் பெரிதும் வேண்டப்படுகின்றன. அறிவியலின் கொடைகளாலேயே இவை ஈடுகட்டப் படுகின்றன.

போக்கு வரத்து சாதனங்கள்:-
பூமியில் பாலையில் கடற்கரையில் நீர் மீது நீருள்ளே,வானில், மலைமீது அடர்காட்டில், நிலவில் செவ்வாயில் என்று மக்கள் பயணிக்க இருப்புப்பாதை ஊர்திகள், அதிவிரைவு மெட்ரோ, மோனோ தொடர் ஊர்திகள் இப்படி யாவினுக்கும் அறிவியலின் பயன்பாடு அன்றாடம் தேவைப்படுகிறது.

முடிவுரை:-
இவை என் சிற்றறிவுக்கு எட்டிய சிலவே. ஆனால் மேலும் பற்பல உள்ளன. அவரவர் சிந்தையில் எண்ணில தோன்றும். அந்தந்த துறை சார்ந்த அறிஞர்கள், புத்தமுதாய்ப் பட்டியலிடுவர். கிட்டிய வர பெற்று வாழ்வில் உயர்வோமாக.

0
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்