உண்மையிலுமே

ஆனந்தபவன் ஓட்டலும் 500 ரூபாய் நோட்டும்….

”எங்கிருந்து தான் சொத்தை கத்திரிக்காயை புடிச்சுட்டு வர்றீங்களோ..?”

”உண்மையிலுமே எனக்கு எது நல்லது எது சொத்தை என்று தெரியவில்லை..”

”இங்க பாருங்க, புள்ளி புள்ளியா இருக்கு. பூச்சி அடிச்சிருக்கு..”

கற்றுக்கொண்டேன்.

பின்பு ஓரு தடவை மொழு மொழுவென பளபளப்பாக வாங்கி வந்தபோது

”இப்படி எல்லாம் வாங்க கூடாது. இதெல்லாம் மருந்து அடிச்சது..”

”பேசாம ஒவ்வொரு காய்கறியும் எப்படிப் பார்த்து வாங்கணும்னு ஒரு கையேடு அடிச்சுக் கொடுத்திடு..’

”அது ஒண்ணு தான் குறைச்சல். எதிலேயும் ஒரு ஈடுபாடு இருந்தா தானா கத்துப்போம்..”

காலை நடைப்பயிற்சி முடித்தவுடன் சில நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவது வழக்கம். அதை நான் ஒழுங்காக செய்வதில்லை என்பதே குற்றச்சாட்டு.

காய்கறிகளை வாங்கிக்கொண்டு ஆனந்த பவனில் ஒரு காபி சாப்பிடுவது உற்சாகம் தரும் செயல்.

எப்பபோதாவது சில நேரங்களில் முறுகலான ரோஸ்ட் அல்லது ஆனியன் ரவா சாப்பிடுவேன். ரவை தோசை ஹோட்டலில் சாப்பிடுவது போல வீட்டில் கிடைப்பதில்லை. அதே போல பேப்பர் ரோஸ்ட் அப்படிங்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் வெறும் பேப்பரில் மட்டும் தான்.

அது என்னமோ தெரியல. எனக்கு ஊத்தும்போது மட்டும் முறுகலாக வராது. அதுக்கு என் வீட்டுக்காரி சொல்ற காரணம் இருக்கே,

”முதல் தோசை அப்படித்தாங்க இருக்கும்..”

கடைசியா சாப்பிட்டால்,

”கடைசி தோசை சரியா வரமாட்டேங்குதுங்க..”

”மாவு கொஞ்சம் புளிச்சுடுச்சுன்னு நினைக்கறேன். கல்லு மாத்தணும், பழசாயிடுச்சி..”

எந்த காரணமும் கிடைக்கலன்னா

”ஏங்க, நீங்க என்ன குழந்தையா..? எப்படிச் சாப்பிட்டாலும் மாவு தானே உள்ள போகுது. சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருங்க..”

ஆனால் அதை தோசைய அவளோட சீமந்த புத்திரனுக்கு ஊற்றும்போது மட்டும் முதல் தோசையிலிருந்து கடைசி தோசை வரை கையை கீறி விடுகிறாற் போல முருகலாக வரும்.

தோசை போதுமான்னு புருஷன்கிட்ட கேட்கிறதுக்கும் தோசை வேண்டுமான்னு பையன்கிட்ட கேட்கிறதுக்கும் நடுவுல இருக்கிற வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டாலே போதும். ஒரு மனுஷன், சம்சாரங்கற பெருங்கடலை நீந்தி கடந்து விடமுடியும்.

அதனால, எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் ஆனந்த பவன்ல ஆனந்தம் தான்.

ஆனியன் ரவா ஒன்று சாப்பிட்டு காபி குடித்தேன். பில் 120-க்கு வந்தது. பையில் ஒரு 2000 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது.

பெரிய ஓட்டலில் ஒரு வசதி. எவ்வளவு குறைவான பில் தொகையாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நோட்டைக் கொடுத்தாலும் வாய் திறக்காமல் சில்லறை கொடுத்து விடுவார்கள்.

மூன்று நூறு ரூபாய் நோட்டுகளும் ஒரு ஐம்பது, இருபது, பத்து ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார். கடைசியாக இன்னொரு கட்டை எடுத்து அதிலிருந்து 500 ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார். ஹோட்டலுக்கு வெளியே வந்து பர்சை எடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்போது தான் கவனித்தேன். மூன்று 500 ரூபாய் தாள்களுக்குப் பதில் நான்கு இருந்தது.

போய் கொடுத்து விடலாம் என்று திரும்பினேன். ‘ப்ளீஸ், வெயிட்’ என்று மனசுக்குளிருந்து ஒரு குரல் கேட்டது. உக்கார்ந்த இடத்துலயே லட்சத்தில் பணம் சம்பாதிக்கிறான். ஒரு தோசை ஒரு காபி 120 ரூபா. அநியாய கொள்ளை. அன்னைக்கு எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டதுக்கு எக்ஸ்ட்ரா பில்லுன்னான். அதுவும் தனி ஆள போனா பெரிய டேபிளில் உட்காரக் கூடாதுன்னு ஓரங்களில சுவரை ஒட்டி போட்டு இருக்கிற இரண்டு சீட்ல போய் உட்காருங்கறான். ஏகத்துக்கு அதிகாரம்.

கல்லாவில் உட்கார்ந்து இருக்கிறவன் முதலாளின்னு‌ நினைக்கிறேன். ஏடிஎம் மிஷின் மாதிரியே உட்கார்ந்திருப்பான். என்ன வித்யாசம்னா பணத்தை வாங்கி வாங்கி வாங்கி போட்டுப்பான். அபூர்வமா பேசுவான். மீதி எல்லாம் நேரமும் சைகை தான். ஏதாவது டேபிளுக்கு மேலே ஃபேன் போடணும்னா சர்வரை பார்த்து பின் தலையைத் தூக்கி ஃபேனைப் பார்ப்பாரு. அவர் புரிஞ்சுகிட்டு சரியான சுவிட்சை தட்டி விடுவாரு. அந்த ஆளு மனசுல அப்படி என்ன தான் ஓடும்..

திரும்பப் போய் கொடுத்துடலாமானு வந்த யோசனையை தட்டிவிட்டு, காய்கறி கடையை நோக்கி நடந்தேன்.

காய் வாங்கிட்டு ஜாக்கிரதையாகக் காசு எண்ணிக் கொடுத்தேன். திரும்ப பர்சை மூடும்போது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு வழி தவறி வந்த ஆடு போல முழித்தது. நன்றாக உள்ளே திணித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

குளிச்சுட்டு அலுவலகத்துக்குக் கிளம்பும்போது திரும்ப அந்த எண்ணம் வந்தது, போய் கொடுத்து விடலாமான்னு. எதுக்கு நமக்கு இன்னொருத்தர் பணம்.?

உடனே வேற ஒரு யோசனையும் வந்தது.

நான் எத்தனை தடவை வாழ்க்கையில காசு இழந்து இருப்பேன். ஒரு சில தடவை பஸ்ல சில்லறை வாங்காமல் இறங்கியது, கிழிஞ்சு போன நோட்டு, அவசரத்துக்கு கைமாத்தா கொடுத்து திரும்பி வராமல் போனது, சொத்தை கத்திரிக்காய், முத்தின முருங்கைக்காய் இப்படி பட்டியல் போட்டால் நான் இழந்தது தான் அதிகம்.

பாரிஸில், கந்தசாமி அண்ட் சன்ஸ்ன்னு ஒரு பெரிய எலக்ட்ரிகல் சாமான் விநியோகம் பண்ற கடை கேள்விப்பட்டிருப்பீங்க. இல்லேனா தெரிஞ்சுக்கங்க. பல பெரிய எலக்ட்ரிக்கல் சாமான்கள் தயாரிக்கிற நிறுவனங்கள் பிலிப்ஸ், ஆங்கர் இவங்களுக்கெல்லாம் சென்னை மாநகரத்துக்கு
மெயின் டிஸ்ட்ரிபியூட்டர் நாங்க தான். வருடத்துக்கு பலகோடி டர்ன் ஒவர். நான் அங்க அக்கவுண்டன்டா வேலை செய்யறேன்.

முன்புறம் ஷோரூம், ஏசி. பின்புறம் ஆபீஸ். முழுக்க வியர்வை..

காலைல பத்து மணிக்கு உள்ளே போனா நேரம் போவதே தெரியாம வேலை. ஷோரூம் ஒன்பது மணிவரை இருக்கும். ஆனா நாங்க ஆபிஸ்ல 6 மணிக்கே கிளம்பிடுவோம்.

வேலைல மும்முரமாக முழுகி போனதால ஆனந்த பவன், 500 ரூபா சுத்தமா மறந்து போச்சு.

பன்னெண்டு மணி வாக்கில பேங்ல பணம் கட்ட செலான் எழுதும்போது எண்ணுல குறிப்பிடும் போது ஒரு சைபர் விட்டுட்டேன். மேனேஜர் செக் பண்ணும்போது என்னை நிமிர்ந்து ஒரு தடவை பார்த்துட்டு
அவர் கையால அதைப் பூர்த்தி பண்ணி ஆபிஸ் பையன்கிட்ட கொடுத்துவிட்டார்.

எனக்கு அவமானமாய் இருந்தது. இது ஒன்னும் பெரிய பிழை இல்லை. எல்லோருக்கும் சகஜமாக ஏற்படும் ஒன்று தான். இருந்தாலும் எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது

500 ரூபாய் ஞாபகம் வந்தது. எல்லாத்துக்கும் அதுதான் காரணம். சாயந்தரம் போய் திருப்பி கொடுத்துடணும்.

மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்புவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது. ஆனந்தபவனையும் 500 ரூபாயும் சுத்தமாக மறந்துவிட்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கும் மகனுக்கும் சண்டை. பொதுவாக இவர்கள் சண்டையில் உள்ளே போகாமல் இருப்பது தான் உசிதம். ஏனெனில் இது கிட்டத்தட்ட ஒரு உட்கட்சி பூசல் போல. எப்ப வேண்டுமானாலும் ஒண்ணு சேர்ந்துக்குவாங்க. மூன்றாவது மனிதனாக நாம் உள்ளே நுழைந்தால் மூக்கு தான் உடையும்.

அதே நேரத்துல், அவர்களுக்குள்ளே என்ன தகராறு என்பதை அறிந்து கொள்ள அதீத ஆர்வம்.

ஏதோ கேட்டதை என் மனைவி வாங்கிக் கொடுக்கவில்லை என்பதை அவன் நினைவுபடுத்துகிறான்.. அதற்கு என் மனைவி,

”கேக்குறதைல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னா உங்க அப்பா எங்கேயாவது போய் திருடத்தான் வேணும்..”

திக்கென்றது. 500 ரூபாய் மேட்டர் நினைவுக்கு வந்தது.

நான் குரலெழுப்பி,

”உங்க ரெண்டு பேரு சண்டையில என்னைய ஏன் இழுக்கிறீங்க? அப்படியே திருடினாலும் நீ போய் திருடு. நான் எதற்குத் திருடனும்..”

எங்க லேன்ல ரெண்டு நாய்கள் இருக்கு. அதுங்களுக்குள்ள அடிச்சுக்கும் புடிச்சுக்கும். பக்கத்துத் தெருநாய் எப்பவாவது இந்த தெருவுல வாக்கிங் வந்தா, இதுங்க ரெண்டும் தங்களுடைய காதுகளைத் தூக்கிக்கிட்டு வால்களை விரைப்பாக்கி இங்க எங்கடா வந்தேன்னு முறைக்குங்க.

கிட்டத்தட்ட அம்மாவும் பையனும் என்னை அப்படித்தான் பார்த்தாங்க.

வீட்டம்மா, “நீங்க தான் இந்த வீட்டையே தாங்கறதா சொல்லுவீங்களே.. அதான் இதையும் நீங்களே செய்வீங்கன்னு சொல்லிட்டேன்..’

இது ரொம்ப முக்கியமான கட்டம். ஆமானு சொன்னாலும் சிக்கல். இல்லைன்னு சொன்னாலும் பிரச்சினை. கிரிக்கெட்ல சில பந்துகள பேட்ஸ்மேன் ஆட மாட்டாரு. மட்டைய உயர்த்திப் பிடித்தபடி பந்து கடந்து விக்கெட் கீப்பர் கைக்குப் போவதை வேடிக்கை பார்ப்பார். அது மாதிரி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி மாட்டிக்காம அமைதியா இருக்கிறது தான் புருஷ லட்சணம்.

ஆனா, இதே நிலமையை அப்படியே தொடர முடியாது. அடுத்த தாக்குதல் இத்தோட இன்னும் வேகமாக வரும்.

உடனே, ”அடடா, மறந்தே போச்சே” என்று ஏதோ முக்கியமானதைத் தேடிச் செல்வது போல ஸ்பாட்டிலிருந்து நகர்ந்து விட வேண்டும்.

நகர்ந்து விட்டேன். இரவு தூக்கம் வரவில்லை.

‘உங்க அப்பா எங்கேயாவது போய் திருடத்தான் வேணும்’

இந்த வார்த்தைகள் மிகவும் என்னை பாதித்தது ‌

நான் ஏற்கனவே திருட ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லிவிடவா..?

ச்சே., என்ன காரியம் பண்ணிட்டேன். காலைல முதல் வேலையா அந்த 500 ரூபாயைத் திருப்பி கொடுத்துடணும்.

நடைப்பயிற்சி முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குப் போனேன்.

நேத்து உங்களுக்கு சில்லறை கொடுக்கும்போது ஒரு ஐநூறு ரூபா சேர்த்துக் கொடுத்துட்டேன் என்று என்னிடம் சொல்வார் என எதிர்பார்த்தேன்.

ஒன்றும் சொல்லவில்லை.

கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி எந்த சலனமும் இன்றி என்னை பார்த்தார். அதே இறுகிய முகம்.

ஹோட்டல் முன்பாக ஓர் ஆண், ஒரு பெண், (பொண்டாட்டியாக இருக்கலாம்) இடுப்பில் குழந்தையுடன் ஒரு சிறுமி ஆகியோர் நின்றிருந்தனர்.

“உணவு விடுதி முன்னால் நிற்க வேண்டாம். நகர்ந்து போங்கள்..” என்று ஓடாடல் முதலாளி கைகளை வீசி விரட்டினார்‌. ஆனாலும் அவர்கள் நகரவில்லை.
வறுமை தாண்டவமாடியது. பார்ப்பதற்கு பிச்சைக்காரர்கள் போல் தெரியவில்லை. இருந்தாலும் அவர்கள் தரித்திருந்த உடைகள், தன்னுடைய ஓட்டலுக்குள்ளே வரத் தகுதியானதாக இல்லை என்று ஹோட்டல் முதலாளி நினைத்திருப்பார் போலும்.

அவன் வேட்டி வெள்ளை நிறத்தை எப்போதோ தொலைத்துப் பழுப்பேறி இருந்தது. அதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல என்பதாக சட்டை காட்சியளித்தது. கூடுதலாகக் கிழிசல்கள் வேறு. எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலை. கம்பிகள் போலத் தாடி. அந்த பெண்.. நைந்து போன, ஒரிஜினல் நிறம் இன்னதென்று சொல்ல முடியாத சாதாரண நூல் புடவையொன்று கட்டியிருந்தாள். அந்த சிறுமி வெறும் சட்டை மட்டும் அணிந்திருந்தாள்.

ஒரு சர்வரை அழைத்து அவர்களை அங்கிருந்து விரட்டச் சொன்னார்.

விரட்டி விட்டு உள்ளே திரும்பிய சர்வர் காட்டமாக,

”கையில காசில்லாம சாப்பிட வந்துட்டறானுங்க. பொறம்போக்குங்க..”

அதே குரலில் என்னிடம்,

”உங்களுக்கு என்ன காப்பியா..? என்று கேட்டான்.

ஒருவேளை, வெறும் காபி குடிப்பவன் எல்லாம் அவனைப் பொறுத்தவரைப் பொறம்போக்கு பட்டியலில் வைத்திருப்பானோ என்னவோ தெரியவில்லை.

காபி குடித்துவிட்டு கல்லாவை நெருங்கி பர்ஸ் எடுத்தேன்.

உணர்ச்சிகளற்ற மிஷின் போல என்னைப் பார்த்தார்.

பர்ஸை திறந்தேன். 500 ரூபாய்கள் உள்ளே நன்றாக செட்டில் ஆகியிருந்தன.

ஐம்து ரூபாய் கொடுத்து விட்டு மீதி பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன்.

இறங்கி நடைப்பாதையில் நடக்கும்போது அந்த குடும்பம் அங்கு நின்று கொண்டிருந்தது. அவன் என்னை நோக்கி வந்தான்.

“சார்….!!”

‘என்ன’ என்பது போல அவனை பார்த்தேன்.

”ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..?”

”என்ன வேணும்..?”

”நான் சொந்த ஊருக்கு போகணும் சார்.. கையில காசு இல்ல..”

”எந்த ஊரு..?”

”உத்திரமேரூர் சார்…”

என்ன சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்த்தேன்.

”கால் டாக்ஸி ஓட்டிட்டு இருந்தேன் சார்..”

”என்னாச்சு..?”

”எட்டு மாசமா தொழிலே இல்லை சார். டியூ கட்டலன்னு சேட்டு தூக்கிட்டு போயிட்டான். கொடக்கூலி கொடுக்கலன்னு வீட்டுக்காரன் துரத்திட்டான்..”

”சரி, அந்த ஓட்டலில் என்ன பிரச்சினை..?”

”நாம பெரிய உசுருங்க. பசிய தாங்கிக்க முடியும். ஆனா குழந்தைகளை பட்டினி போட முடியாது இல்லைங்களா..? கையில் ஒரு நுறு ரூபா இருக்குது. அதுங்களுக்கு எதாவது டிபன் வாங்கலாம்னு வந்தேன். துரத்தி விட்டுட்டாங்க..”

பரிதாபமாக இருந்தது.

பர்ஸ் திறந்து ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

”பத்திரமா ஊர் போய் சேரு..”

அவன் கண்களிலிருந்து நன்றி தாரை தாரையாகக் கொட்டியது.

திடீரென ஏதோ நினைத்தவனாய் இன்னொரு 500 ரூபாய் கொடுத்து, “நாலு பேரும் நல்லா சாப்பிடுங்க..” என்றேன்.

அவன் திகைத்தான்.

”உங்க அட்ரஸ் கொடுங்க. நான் பணம் திருப்பி அனுப்புறேன்..”

புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்.

காய்கறி வாங்காமலேயே வீட்டுக்குத் திரும்பினேன்.

”காய்கறி எங்கேங்க..?”

”இன்னைக்கு எதுவுமே நல்லால்ல. அதனால வாங்கல. வந்துட்டேன்..”

”அது எப்படிங்க , உங்களுக்குன்னா எதுவுமே நல்லதா கிடைக்காதா..?”

‘யார் சொன்னது..? நீ கிடைக்கல..!”

அவள் முகத்தில் வெட்கம் சுடர்விட,

வெகுவாய் ரசித்தேன்.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்