ஒரு நாட்டின் அரசன் அவனுடைய மகனைக் கல்விக்காக குருகுலத்துக்கு அனுப்பினார். அவனும் குருகுலத்தில் மன்னன் மகன் என்ற பெருமையை விட்டு விட்டு அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குருவின் கட்டளைகளை மிகக் கடமையாகக் கடைப்பிடித்தான்.இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் படித்து முடித்து அவன் அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது.
மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! முறமாகவே இருக்கிறேன் என்றான்.
இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.
நீதி: நல்ல விஷயங்களை மட்டுமே மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.