நிலவின் காதல்

நிலவின் அழகு! || The Beauty Of The Moon

நிலா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. காதலைத் தவிர அனைத்திலும் பரந்துபட்ட அறிவுடையவள். காதலனைத்தவிர வேறு யாரிடமும் அவள் மண்டியிட்டதில்லை. அத்தனை தற்துணிவுடைய பெண் அவள். உருண்டைக் கண்களுக்குள் எப்பொழுதும் ஒரு குறும்புத்தனம் சுழன்றுகொண்டிருக்கும்.

சிரிக்கும் போதெல்லாம் கண்ணிமைகள் பரதநாட்டியம் ஆடும். பெண்ணழகின் ரேழகி அவள். எமது நட்பின் வயது ஏறக்குறைய பத்து வருடங்கள். அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் எனக்கு அழகிகளின் அற்புத அகம்பாவம் பற்றி தெரியாமலே போயிருக்கும். அவள் அழகில் அப்படியொரு கெறு ஒட்டிக்கொண்டிருக்கும்.

கடதாசிப்பூக்களுக்கும், கள்ளிப்பூக்களுக்கும் மத்தியில் இறுமாப்பாய் நிற்கும் மல்லிகை போல. அவள் கட்டும் சேலைகளின் அத்தனை இழைகளும் அவ்வளவு அம்சமாய் நிமிர்ந்து நிற்கும். அவள் தேவலோகத்தின் சிங்காரி.

சிருஷ்டிக்கப்பட்ட அந்த சிற்றூரின் சீமாட்டி. இத்தனை வசீகரமான பெண்ணை தோழியாக வைத்திருப்பதில் எனக்கோ அத்தனை உடன்பாடு இருந்ததில்லை. மனம் அடிக்கடி நிலைகுலையும். நான் புத்தனாக இருந்தால் கூட நான் அந்தப்புரம் போய்விட்டால் என் நிலை? இருந்தும் நான் தோழன் என்பதை அடிக்கடி அவள் கேட்காமலேயே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வேன். அது என்மேல் நான் கொண்டிராத என் நம்பிக்கையின் சாட்சியம். இருந்தும் இப்படியொரு தோழி காதலியானால்?

நிலா என்னை நீங்கும்போதெல்லாம் எப்படியோ இருள் சூழ்ந்துகொள்ளும். அன்றும்
அப்படித்தான். வெறும் இருட்டில் வெறுமையாய் உறங்கிக்கொண்டிருந்தேன். எனது
தொலைபேசிக்கும் ராசி இருந்ததில்லை என்னைப்போல. எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும் அல்லது ஆண் நண்பர்களின் அழைப்பு மட்டும் அவ்வப்போது வந்துபோகும். இருட்டில் சிணுங்க ஆரம்பித்த தொலைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு தூக்க போதை வழிவிடவில்லை. முதல்முறை அடித்து ஓய மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். திடீரென ‘உன்கூட கொஞ்சம் பேசணும்..நைட்டுக்கு ப்ரியா இருப்பியா..?’ என நிலா காலையில் சொன்னது ஞாபகம் வரவே, சடாரென எழுந்து தொலைபேசியை எடுத்து தட்டியதில் தெரிந்தது அவள் தான் சற்று முன்னர் அழைத்திருந்தது. உடனே ரீடயல் செய்தேன். அவள் ‘ஹலோ..’ என்றாள்.

எனது இருட்டு அறை திடீரென நத்தார் பண்டிகை கொண்டாடும் தேவாலயம் போல
பளிச்சென ஆனது. நடுச்சாமத்தில், யாருமில்லா தனிமையில் காதுகளுக்குள்
பாயும் இளையராஜா பாடல்போல பேச ஆரம்பித்தாள். அந்த நாட்களிலெல்லாம்
இளையராஜா என்னை ஆட்கொண்டிருந்தாலும் நிலா என்னை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள். ‘சொல்லு நிலா.. என்ன இந்த நேரம்..?’
வார்த்தைகள் தடுமாறினாலும் சாதாரண தோழன் அளவிற்கு நடித்துக்கொண்டேன்.
‘இல்ல.. நீ என்ன பண்ணுறா?’. இரவு ஒன்பது மணியும், நடுச்சாமம் ஒன்றரை
மணியும் எனக்கு ஏதோ ஒரேமாதிரித்தான். ‘இப்ப ஒம்பது மணி.. கொர்…’
என்றேன். ‘அப்ப சரி நீ தூங்கு.. நான் வைக்கிறேன்..’ என்றவளை நான்
உடனடியாகத் தடுத்தேன். ‘ச்சே.. ச்சே.. சொல்லு..!’. வேண்டாமல் வந்த வரத்தை
வேண்டாம் என்பதா?

அது இது என அரைமணிநேரம் கடந்தது அவளுக்கும் எனக்குமான உரையாடல்.
இறுதியில் ‘என்ன லவ் பண்றியா?’ என கேட்ட ஒரு கேள்வியில் மனதில்
பட்டாம்பூச்சி பறந்தாலும் எதற்காக திடீரென அப்படிக்கேட்கிறாள் என்பதை
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் பொதுவாக பதில்சொல்லலாம் என ‘ஏன் திடீரென அப்பிடி கேட்டாய்.. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்தானே!’
என சமாளித்தேன். நான் சமாளிப்பதும் மறுபுறத்தில் நான் அலைவதும் தெரிந்ததோ
என்னவோ சொல்ல வந்ததை சட்டென போட்டு உடைத்தாள். ‘இல்ல… நான் உன்ன லவ் பண்றேன்.. ஐ லவ் யு!’. அவ்வளவுதான் பிறகென்ன, என் கூரை திறந்தது. வானம் தெரிந்தது. விண்மீன்கள் என் அறைவரை வந்து சுவர்களில் அமர்ந்துகொண்டது.

ஒரு புத்தன் றோமியோவாகிக்கொண்டிருந்தான். ஒரு கண்ணதாசனும் ஒரு
ஷேக்ஸ்பியரும் பேனையோடும் பேப்பரோடும் என் அறையில் வந்து
குந்திக்கொண்டார்கள். என்னை திடீரென அழகாய்க் காட்டியது கண்ணாடி. ‘நானும்
நிலாவும் வாழக்கையும்’ என்கின்ற சுயநாவலின் முதல்பக்கம் நிரம்ப
ஆரம்பித்தது.

இரண்டு வருடங்கள் எப்படிப்போனது என அடிக்கடி நானும் நிலாவும்
பேசிக்கொள்வோம். ஆயிரம் சண்டைகள், ஆயிரம் கோவங்கள், கணக்கில்லா புன்னகை, அளவில்லா ஆசைகள், அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள், ஆரவாரமில்ல கட்டியணைப்பு, திருட்டு முத்தங்கள், தினம்தோறும் ‘ஐ லவ் யு’, குழந்தை பற்றிய இங்கித கற்பனை, குடும்பம் பற்றிய கனவு, அவள் மடியில் போடும் குட்டித்தூக்கம், அவளைப்பற்றி நண்பர்களிடத்தில் அடிக்கும் அளப்பரைகள்..அப்பப்பா.. அந்த இரண்டு வருடங்கள் எங்கள் வாழக்கையை அப்படியே இரசித்து வாழவைத்த காலம்.

‘டேய்.. எங்க இருக்க..?’ அன்று தொலைபேசியில் வந்த என் நிலாவின் குரலில்
ஒரு படபடப்பு ஒட்டியிருந்தது. அவள் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
சொல்லும் என்னால் இதை கண்டுபிடிக்க முடியாதா என்ன. ‘என்ன பிரச்சன லவ்லி?’
நேரடியாகவே விடயத்திற்கு வந்தேன். ‘செல்லம்.. நீ என்ன சாதி?’ நிலா
கேட்டாள். அவளது பேச்சில் ஒரு தேடலும் ஒரு ஏமாற்றமும் ஒரு பருதவிப்பும்
படர்ந்திருந்தது. ‘தெரியல லவ்லி, எதுக்கு திடீரெண்டு.. அம்மாட்ட கேட்டு
சொல்லவா..?’, ‘ஓகே ஓகே..!’ தொலைபேசி கட்டானது.

‘எதற்கு அதெல்லாம் இப்பொழுது?’ எனக்கு மூளை சுற்றி சுழன்று களைத்து திரள
ஆரம்பித்தது. குளப்பத்திற்கு மௌனம் மருந்தல்ல. உடனடியாகவே நிலாவை
அழைத்தேன் தொலைபேசியில். ‘நீங்கள் அழைத்த இலக்கம் இப்பொழுது பாவனையில் இல்லை’ என பதில் வந்தது. நேரடியாக வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டேன்.

‘அம்மா நாம என்ன சாதி..!’. அம்மா சுருக்கமான ஆனால் தெளிவான ஒரு
விளக்கத்தைத் தந்தார். அதாவது நிலாவின் சாதியை விட நாங்கள் மூன்று சாதி
குறைந்தவர்களாம். எனது காரை எடுத்துக்கொண்டு நிலாவின் வீடு நோக்கி
பறந்தேன்.

‘நிலா.. நிலா..’ வீட்டின் உட்புறத்திலிருந்து இரண்டு நாய்கள் கேட்டை
நோக்கி ஓடி வந்தன. அதற்கு பின்னால் மூன்றாவது நாயை எதிர்பார்த்தேன் ஆனால்
வந்தது நிலாவின் அப்பா.

‘என்ன வேணும்?’ கோவமாகக் கேட்டார் எனது மாமா.

‘நிலாவ பாக்கணும்..’

‘அவ இல்ல.. கண்டவன் நிண்டவன் எல்லாம் அவள பாக்க முடியாது!’

‘ப்ளீஸ் அங்கிள்.. ஒருக்கா கூப்பிடுங்க..’

‘உனக்கு ஒருக்கா சொன்னா கேக்காதா?’

‘சரி.. இட்ஸ் ஓகே..’ என திரும்பி கார் கதவைத்திறந்தேன். அப்பொழுது
வாசலில் நின்றுகொண்டிருந்த நிலாவின் அப்பாவின் குரல் கேட்டது.

‘சாதி குறைஞ்ச நாய்களுக்கெல்லாம் என்ட பிள்ள கேக்குதா?’
………………………

மூன்று வருடங்கள் கடந்தன. நிலாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக
அறிந்தேன். அவளுக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும். பாவம் அதிஷ்டம்
கைகொடுக்கவில்லை. நிலா இன்றுவரை என்கூடவே நடக்கும் நிழல். அவளை
இப்பொழுதுகூட என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. என் இதயத்தில்
இப்பொழுதும் அவளின் நினைவுகள்தான். அழிக்கமுடியாத சித்திரம் அவள். ஆபிஸ்
முடிந்து ஒருநாள் வீடு வந்தேன். தொலைபேசியில் ஒரு எம்எம்எஸ் வந்து
எனக்காய் தொங்கிக்கொண்டிருந்தது. அது எனது நண்பனிடமிருந்து வந்திருந்த
ஒரு போட்டோ. கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். நிலாவின் அப்பா கட்டிலில் படுக்க
வைக்கப்பட்டிருக்கிறார். மறுபக்கம் ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த
குருதி கொங்சம் கொஞ்சமாய் அவர் கரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. அந்த
குருதிப்பொட்டலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். அதில் ‘அரவிந்’ என எனது
பெயர் எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக நண்பனிடம் தொலைபேசினேன். ‘என்னடா இது.. பிளட்ல என்ட பேர்
இருக்கு..?’ என வினவினேன். ‘மறந்துட்டியா, போன மாசம் நீ குடுத்த ப்ளட்..
பாவம் யாரோ புளச்சுப்போகட்டும் உன்ட புண்ணியத்தால.. சரி ஆபறேசன்
தியட்டர்ல நிக்கிறன்.. அப்புறம் கூப்பிடுறன்..’ தொலைபேசி கட்டானது.

மீண்டும் அந்த குருதிப்பொட்டலத்தை உற்று நோக்கினேன். எனது பெயருக்கு கீழே
ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதில் எனது சாதியை குறிப்பிட்டிருப்பார்களோ??
ஆவலோடு உற்று நோக்கினேன். அதில் ‘AB+’ என மட்டும் எழுதப்பட்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிரில் என் அதே
நிலா. ‘அரவிந், நான் நிலா..’ என அவள் அறிமுகம் செய்யும் முன்னமே நான்
‘ஹாய் நிலா, எப்பிடி இருக்கீங்க?’ என கேட்டேன். நிகத்தின் அறிமுகம்
விரலிற்கு தேவையில்லையே. ‘தாங்ஸ்..’ என்றாள். இரண்டு வருடங்களுக்கு
பின்னர் அவள் குரல் கேட்டதோ என்னவோ மறுமொழிக்கு நாவும் உதடும் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வருவதாய் இல்லை. எதுவும் தெரியாதவனாய் ‘எதுக்கு திடிரெண்டு தங்ஸ் எல்லாம்…???’ என வினவினேன். ‘இன்னைக்கு அப்பா உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.. அதான்..!’. எனக்கு பேச்சு வரவில்லை. பற்களை இறுக உரசிக்கொண்டேன்.

‘இட்ஸ் ஓகே..!’ என குரலை பணித்துக்கொண்டேன். ‘அதோட அப்பா நீங்க செய்த
இவ்வளவு பெரிய உதவிக்கு உங்களுக்கு ஏதாச்சும் பரிகாரம் செய்யணும்னு
ஆசப்படுறார்.. என்ன வேணும் அரவிந்??’.

அந்த மனுசனை இப்பொழுதே ஓடிச்சென்று குரல்வளையை நசித்து சாகடிக்கவேண்டும் போல் இருந்தது. எனது நிலாவிடம் எக்கச்சக்கமாய் கோவம் வந்தது என்றால் அது இப்பொழுதுதான். இவர்களுடன் எல்லாம் தொடர்ந்து பேச்சு வைத்திருப்பதே பாவம் எனத் தோணியது.

பயங்கரக் கோவத்துடன் ‘நல்லது நிலா, எனக்கு உன்னைத் தவிர எல்லாமே
போதுமானதாய் இருக்கிறது. சரி, உங்க அப்பாவுக்கு திரும்பவும் ரத்தம்
தேவைப்பட்டா கால் பண்ணு. ஓகே???!’ என அழைப்பை அவசரமாய் அன்று துண்டித்த ஞாபகம். இல்லை………… திரும்பிப்பார்த்ததில் என் மேசையிலிருந்த
நிலாவின் புகைப்படத்தை நோக்கி எறியப்பட்ட என் தொலைபேசி சுக்கு நூறாய்
உடைந்து கிடந்தது. ஆனாலும், அவசரமாக நெருங்கிப்போய் பார்த்தேன், நல்ல
வேளை என் நிலாவின் புகைப்படத்துக்கு மட்டும் எதுவும் ஆகியிருக்கவில்லை.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்