sathuragarathi

சிலப்பதிகாரம்

தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். இது சமண சமயக் காப்பியம். இந்தக் காப்பியம் சங்க காலத்திற்கும் தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

காப்பிய அமைப்பு

சிலப்பதிகாரக் காப்பிய நிகழ்ச்சிகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடு என்னும் மூன்று நாடுகளில் மூவேந்தரின் தலைநகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாம். எனவே இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று காண்டங்களில் முப்பது காதைகள் அமைந்துள்ளன. (காண்டம் – பெரும் பிரிவு; காதை = சிறு பிரிவு)

* பெயர்க்காரணம் : இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது.

காப்பிய நோக்கம்

காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. கோவலனும் கண்ணகியும் வானவர் உலகு (வீடு) செல்வதும் காட்டப்படுகிறது. எனினும் காப்பியத்தில் இளங்கோவடிகளின் நோக்கம் அறமே எனலாம். தம்மை அறவுணர்வு உந்த, தாமும் மக்களிடம் அறவுணர்வை விழிப்புறச் செய்ய இளங்கோவடிகள் பாடியது சிலப்பதிகாரம்.

காப்பியச் சிறப்பு

சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்னிருந்த தமிழிலக்கியம் அகத்திணை, புறத்திணைப் பாடல்களே. அவை தனிமனித உணர்ச்சிகளைப் பொதுமையில் நின்று உணர்த்தின. ஆனால் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, பெருங்காப்பியமாக, அமைந்தது சிலப்பதிகாரம் ஆகும்.

* காப்பியத் தலைவி

காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன் நிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள்.

* முத்தமிழ்க் காப்பியம்

இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.

* மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

சிலப்பதிகாரம் இவ்வுலக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. அவையாவன:

  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
  • உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
  • ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பது

(பிழைத்தல் = தவறு செய்தல்; கூற்று = எமன்; உரை சால் = புகழ்மிகுந்த; உருத்து = சினந்து) இவை சிலப்பதிகார நூல் முழுமையும் விரவி வந்துள்ளதைக் காணலாம்.

காப்பியப் பெருமை

சிலப்பதிகாரக் காலத்தில் வழக்கிலிருந்த தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் துணைநிற்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பெருமையைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

வழக்குரை காதை

சிலப்பதிகாரத்தின் இரண்டாம் காண்டமான மதுரைக் காண்டத்தில் பத்தாவது காதையாக வழக்குரை காதை இடம்பெற்றுள்ளது. ஆசிரியப் பாவினால் அமைந்த இக்காதையில் சில வெண்பாக்களும் இடம் பெற்றிருக்கின்றன.

கதைச் சுருக்கம்

கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் பொருள் தேட மதுரை செல்கிறான். மதுரையில் மாதரி என்ற ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக இருக்கச் செய்து, கண்ணகி தந்த காற்சிலம்பை விற்று வரக் கருதி மதுரை நகரக் கடைத்தெருவிற்குச் செல்கிறான். அங்கு அரண்மனைச் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன் ஒருவனது சூழ்ச்சிக்கு ஆளாகிறான். அதன் விளைவு கோவலன் திருடன் எனக் கருதப்பட்டு அரசன் ஆணையால் கொலை செய்யப்படுகிறான். கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட கண்ணகி சினந்து எழுந்து பாண்டியன் அரசவைக்குச் சென்று வழக்குரைத்துக் கோவலன் கள்வன் அல்லன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றாள். உண்மை உணர்ந்த பாண்டியன் அக்கணமே தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்துகிறான்.

கதை அமைப்பு

அரசநீதி பற்றி எழுந்த இந்த வழக்குரை காதை நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.

கதை மாந்தர்

வழக்குரை காதைக் கதை நிகழ்ச்சியில் கோப்பெருந்தேவி, பாண்டிய மன்னன், வாயில் காவலன், கண்ணகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வழக்குரை காதை நிகழ்ச்சிகள்

கண்ணகி உணர்ச்சி பொங்க வழக்குரைத்து வெல்வதும், தோற்ற பாண்டிய மன்னன் உயிர் நீப்பதும் இக்காதை நிகழ்ச்சிகள் ஆகும்.

கோப்பெருந்தேவியின் கனவு

அரண்மனையில் பாண்டிய அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீய கனவினால் உள்ளங் கலங்கித் தன் தோழியிடம் கூறியது :

“தோழீ! கேள். நம் மன்னரது வெண்கொற்றக் குடை செங்கோலுடன் கீழே விழுந்தது. அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் ஓசை இடைவிடாது ஒலித்தது. எல்லாத் திசைகளும் அப்போது அதிர்ந்தன. அப்பொழுது சூரியனை இருள் சூழக் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றக் கண்டேன். பகல் பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியோடு பூமியில் விழக் கண்டேன். இதெல்லாம் என்ன? அதனால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுண்டு. அதனை நம்மன்னவர்க்குச் சென்று கூறுவேன்.”

இவ்வாறு கூறிய தேவி மன்னன் இருக்கும் அரசவை நோக்கிச் சென்றாள். (பின்னால் நிகழப் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பாக முன்னரே உணர்த்துவது நாடக உத்தியாகும். இங்குத் தேவி கண்ட கனவின் மூலம் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது குறிப்பாக உணர்த்தப்பட்டது.)

இப்பகுதியை ஆசிரியர் கீழ்வருமாறு பாடுகிறார் :

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா
திசை இரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம்

கோப்பெருந்தேவியின் வருகை

அரசி மன்னனை நாடிச் சென்ற போது தோழியரும் உடன் வந்தனர். கண்ணாடி ஏந்தி வந்தனர் சிலர்; ஆடை, அணிகலன், ஏந்தினர் சிலர்; மணப்பொருள் ஏந்தி வந்தனர் சிலர்; மாலை, கவரி, அகிற்புகை முதலியன ஏந்தி வந்தனர் சிலர்; கூனராயும், குறளராயும், ஊமையராயும் உள்ள பணி செய்யும் இளைஞரோடு, குற்றேவல் செய்யும் மகளிர் அரசியைச் சூழ்ந்து வந்தனர்; முதுமகளிர் பலரும் ‘பாண்டியன் பெருந்தேவி வாழ்க!’ என உள்ளன்போடு வாழ்த்தினர். (கூனர், குள்ளர், ஊமையர் முதலிய குறைபாடு உடையோர் அரண்மனையில் பணிபுரிவது அக்காலத்து வழக்கமாகும்.) இவ்வாறு தன் பரிவாரத்துடன் தேவியானவள் சென்று, தன் தீய கனவில் கண்டவற்றை எல்லாம் பாண்டிய மன்னனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்து, தென்னவர் கோமானாகிய பாண்டியன் தேவி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

கண்ணகி வருகை

அவ்வேளையிலே கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கிருந்த காவலனை நோக்கி, “வாயில் காவலனே! வாயில் காவலனே! நல்ல அறிவு அற்றுப் போன, தீய நெஞ்சத்தால் செங்கோல் முறையினின்றும் தவறிய கொடுங்கோல் மன்னனுடைய வாயில் காவலனே! பரல்களையுடைய இணைச் சிலம்புகளுள் ஒரு சிலம்பினை ஏந்திய கையை உடையவளாய், தன் கணவனை இழந்தாள் ஒருத்தி அரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்” என்று கூறினாள்.

வாயிலோயே வாயிலோயே

அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே

வாயில் காவலன் கண்ணகியின் சினங்கொண்ட தோற்றம் கண்டு அஞ்சியவனாய் விரைந்து சென்று மன்னனை வணங்கி வாழ்த்தி நின்றான்.

“எம் கொற்கைப் பதியின் வேந்தனே வாழ்க! தென் திசையிலுள்ள பொதிகை மலைக்கு உரிமை உடையவனே வாழ்க! செழிய வாழ்க! தென்னவனே வாழ்க! பழி வருவதற்குக் காரணமான நெறியில் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக!

குருதி பீறிடும் மகிடாசுரனுடைய பிடர்த்தலைப் பீடத்தின் மேல் நின்ற கொற்றவையோ என்றால் அவளும் அல்லள்; சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்லள்; இறைவனை நடனமாடக் கண்டருளிய பத்திர காளியோ எனில் அவளும் அல்லள்; பாலை நிலக் கடவுளான காளியோ எனில் அவளும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்; உள்ளத்திலே மிகவும் சினங்கொண்டவள் போல் தோன்றுகின்றாள்; அழகிய வேலைப்பாடமைந்த பொன் சிலம்பு ஒன்றினைக் கையிலே பிடித்துள்ளாள்; கணவனை இழந்தவளாம்; நம் அரண்மனை வாயிலில் உள்ளாள்,” என்றான்.

வாழிஎம் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண்டு அருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே

(கொற்கை = சிறந்த முத்துகள் கிடைக்கும் கடற்கரைப் பட்டினம். செழியன், தென்னவன், பஞ்சவன் என்பன பாண்டிய அரசர்க்குரிய பெயர்கள். பழியொடு படராப் பஞ்சவ என்றது அன்று வரையிலும் அரசியல் நீதி தவறாது அரசாண்டவன் என்பதை உணர்த்தும். பசுந்துணி = வெட்டப்பட்ட துண்டம்; பிடர்த்தலை = பிடரியோடு கூடிய மகிடாசுரன் தலை; இறைவன் = சிவபெருமான்; அணங்கு = பத்திரகாளி; கானகம் உகந்தகாளி = பாலைநிலத் தெய்வம்; செற்றனள் = உட்பகை கொண்டவள்; செயிர்த்தல் = சினத்தல்)

இப்பகுதி கண்ணகி சினத்தாலும் உருவத்தாலும் மக்கள் தன்மையில் இருந்து வேறுபட்டு, கொற்றவை முதலிய தெய்வ மகளிரே போல் காணப்பட்டாள் என்பதை உணர்த்துகிறது.

தொகுப்புரை

தமிழ் இலக்கியத்தில் தொடர்நிலைச் செய்யுளாலான முதல் பெருங்காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இக்காப்பியத்தின் ஒரு காதையான வழக்குரை காதை என்ற இந்தப் பாடப் பகுதியில் கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாறு மூலம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்; பாண்டிய மன்னன் ஆராயாது செய்த தவறே அவனது உயிருக்குக் கூற்றாய் முடிந்தது என்பதன் மூலம் அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்