anupavam

ஒரு வித்தியாசமான அனுபவம்

நான் ஆகாய விமானத்தில் பல முறைகள் பயணம் செய்திருந்தாலும்  ஒரு முறை ஏற்பட்ட அனுபவத்தை மறக்கவே முடியவில்லை. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நானும்,  என் மகனும் பம்பாயிலிருந்து சென்னைக்கு ஒரு மத்தியான நேரத்தில் விமானத்தில் கிளம்பினோம். அன்று விமானத்தில்  நல்ல கூட்டம். ஏகப்பட்ட சின்னக் குழந்தைகள் வேறு. சாதாரணமாய் ரயில் பயணங்களின்போது குறிப்பிட்ட நேரத்தில் ரயில் கிளம்பாமல் நீண்ட நேரம் தாமதமாகக் கிளம்பி, போய்ச்சேரும் இடத்தை அடைய மிகவும் நேரமாகும். ஆனால், வரவர விமானங்களும் குறித்த நேரத்தில் கிளம்பாமல் மிகவும் லேட் செய்கிறது.  அன்று நான் சென்ற விமானம் ஷண்டிங் எஞ்சின் போல் கிளம்புவதும்,  நிற்பதும்,  மீண்டும் கிளம்புவதும்,  நிற்பதுமாக  மிகவும் சண்டித்தனம் செய்து கடைசியில் ஒருவழியாகக் கிளம்பியது. அரைமணிநேர தாமதத்திற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்ட பொழுது,  மோசமான வானிலை காரணமாக பயணிகள் சீட் பெல்ட்டை  கழட்டாமல் -50- அவரவர்  இருக்கையிலேயே இருக்கும்படி ஒருமுறை இல்லை,  விடாமல் தொடர்ந்து அறிவிப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. விமானம் வழக்கத்தை விட அதிகமாய் குலுங்கி ஆடியது. இதற்கு நடுவில்,  குளிர்பானம், சாப்பாடு என்று வரிசையாக வர ஆரம்பித்தன. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூட மிக ஆவலாக கொடுக்கப்பட்டதை எல்லாம் ஒரு கை பார்க்கத் தொடங்கினார்கள்.  சும்மாவா? ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தல்லவா பிரயாணம் செய்கிறோம்.  ஓசியாய்க் கிடைக்கும் விஷயங்களை விட மனம் வருமா?  எல்லோரும் சாப்பிட்டு முடித்து பிளேட்டுகள் அகற்றப்பட்டன. நல்லவேளையாக, கடவுளாய்ப் பார்த்து அன்று காலை முதலே என் வயிற்றை ரிப்பேர் ஆக்கி விட்டதால் நான் பழங்களைத் தவிர  வேறு எதுவுமே சாப்பிடவில்லை. மற்ற பின் விளைவுகளுக்குள் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொண்டேன்.  காபி, டீக்குத்  தயாராக எல்லோரும் அவரவர்கள் கப்பை ரெடியாகக்  கையில் வைத்துக்கொண்டோம்.  ஏர்ஹோஸ்டஸ் என் முன்சீட், பக்கத்து சீட் கப்புகளுக்கு காப்பி ஊற்றிவிட்டு எனக்கு ஊற்ற முயன்ற அந்த நொடியில் விமானம் தலை கீழாய்க் கவிழ்ந்து விடுவதுபோல் குலுங்கிய பயங்கரக் குலுக்கல்களை எப்படி எழுத்தில் வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நெஞ்சு வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடுவது போன்ற உணர்ச்சி. பூகம்பம் இப்படித்தான் இருக்குமோ என்னவோ. விடாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் குலுங்கல்,  சாய்வு என்று பல சர்க்கஸ்கள். இருதய பலவீனம் உடையவர்களுக்கு கட்டாயமாக ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். -51- பிளேனின் குலுங்கல் தாங்காமல் ஏர்ஹோஸ்டஸ் தொப்பென்று தரையில் விழ,  அவள் கையில் வைத்திருந்த ஜக்கிலிருந்தும்,  அவள் அருகில் இருந்த இரண்டு பயணிகளின் கோப்பைகளில் இருந்தும் கொதிக்கும் காப்பி அந்தப் பெண்ணின் தலை,  முகம், முதுகு எல்லாம் சுடச்சுடக் கொட்ட, பாவம் அந்த அப்பாவிப் பெண் அத்தனைஅவஸ்தைகளையும் அனுபவித்தபடி முகத்தைக் கைகளால் மூடியபடி அப்படியே உட்கார்ந்திருந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒருவழியாக விமானத்தின் ஆக்ரோஷம் அடங்கி சற்று நிலைப்பட்டதும்,  எழுந்து போய் முகம்,  தலை எல்லாம் சுத்தம் செய்துகொண்டு மீண்டும் தன் கடமையை செய்யத் தொடங்கிவிட்டாள். மீண்டும்,  மீண்டும் ‘பெல்ட்டைக் கழற்றுவது ஆபத்து’  என்று அறிவிப்பு தொடர்ந்து  வந்துகொண்டே இருந்தாலும் நிறையப் பயணிகளால் பொறுமையாக சீட்டில் உட்கார முடியாமல் ஒரு முக்கியமான வேலை அவர்களை சீட்டை விட்டு அடிக்கடி ஓட வைத்தது. பெல்ட் கட்டாவிட்டால் ஆபத்து என்று தெரிந்தும் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆம்.  விமானத்தின் தாங்கமுடியாத குலுக்கல்களால் அப்போதுதான் சாப்பிட்டு முடிந்திருந்த (சிலர் காபியையும்  வேறு குடித்து முடித்திருந்தார்கள்) பயணிகளில் முக்கால்வாசிப்பேர் தங்கள் குழந்தைகளையும் கையில் பிடித்தபடி வாந்தி எடுப்பதற்காக பாத்ரூமிற்கும், அவர்கள் இருக்கைக்குமாய் பலமுறை ஓடும் பரிதாப நிகழ்ச்சியும் நடந்தது. விமானத்தை விட்டு வெளியே வரும் வழியில் எல்லாம் கூட மிகவும் ஜாக்கிரதையாக நடக்க நேர்ந்தது,  பலர் குமட்டி அசிங்கம் செய்திருந்ததால்.  பார்க்க மிகவும் அருவெறுப்பாக  இருந்தது.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்