சுற்றுசூழல் பாதுகாப்பு

மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் ஆகியவற்றின் இயக்கம் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது சுற்றுச்சூழல். சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். மனித வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமாயின் சூழல் மிகவும் அவசியமானதாகும். இயற்கையை நேசித்து இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டியது நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும். சூழலை அழித்தல் நமது அழிவிற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதாக அமைகிறது. அது போல மனிதனால் ஒருபோதும் இயற்கையை வென்றுவிட முடியாது என்பது தெளிவான உண்மை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றி நம் முன்னோர்கள் பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக பிரித்து அதற்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயரிட்டனர், அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகிவிட்டது. இன்று பல வளர்ந்த நாடுகளின் நகரங்களில் மூச்சு விடவே கடினமான சூழ்நிலை நிலவுகிறது. இது காற்று மாசுபடுவதால் வந்த விளைவுதான். சுற்று சூழல் மாசுபாட்டினால் நாம் நீர் நிலைகளில் சுத்தமான நீர் கிடைக்காமல் சுத்திகரிக்கப்பட்ட நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். மழை குறைந்து விட்டது, வெள்ளங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நிலவளம் குறைந்து வளரும் பயிர்களும் தானியங்களும் காய்கறிகளும் விஷத்தன்மை உள்ளதாக மாறிவிட்டன.

சுற்றுசூழல் பாதுகாப்பு ஏன் முக்கியமானது என்று கேட்டால் ஒரு போர்வீரனை அவனது கவசம் எவ்வாறு காக்கின்றதோ அது போல நம்மையும் இவ்வுலகத்தையும் இயற்கை சூழல் பாதுகாக்கிறது. மனிதனின் சுய தேவைக்காக சுற்றுச்சூழலை அழிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு, இயற்கை வளங்களை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமான மற்றும் ஒவ்வொரு உயிர்களதும் தலையாய கடமையாகும்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது. இயற்கையை நாம் அழித்தால் அந்த இயற்கையால் நாம் அழியவேண்டி வரும் ஆகவே தான் சூழலை பாதுகாக்க வேண்டும் எனும் கருத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக வருடம் தோறும் ஜீன் 5 ஆம் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பு தினம் உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்