மழை நீர் சேகரிப்பு

நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது . உலகிற்கு ஆதாரமாக விளங்கும் நீரானது பூமிக்கு பல வழிகளில் கிடைத்தாலும் பெரும் பங்கு மழை நீர் மூலமே கிடைக்கின்றது. “நீரின்றி அமையாது உலகு” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்துள்ளார். ஆனால் இன்று நீரின் முக்கியத்துவம் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இதனால் நீர் விரயமாவதற்கு மனிதனே முதல் காரணமாக அமைகின்றான். முன்னோர் காலத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மக்கள் வாழ்ந்தனர். மழைநீரை சேமித்து அதனைக் கொதிக்க வைத்து அருந்தி வந்தனர். அதிக தரமான நீர் எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் மழைநீர் ஆகும்.


இன்று இயற்கையாகக் கிடைக்கும் நீரை மறந்து நாம் பணம் கொடுத்து நீரைப் பெறுகின்றோம். ஆனால் மழைநீரை சேமிக்கும் போது, பணச்செலவு மீதம் ஆகின்றது. பருவமழை குறையும் காலகட்டங்களிலோ, வறட்சி ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலோதான், நாம் மழை நீர் சேகரிப்பு பற்றியெல்லாம் சிந்திக்கிறோம். மழை நீர் என்பது இயற்கையின் உன்னதமான பரிசு என்றே சொல்லவேண்டும். இந்த தூய நீரின் சேகரிப்பு/சேமிப்பு, பயன்கள் பற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியமானது. பெய்யும் மழைதண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும். நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழை நீர் சேகரிப்பு ஆகும்.


தற்காலத்தில் நீரை சேகரிப்பதற்கு பல்வேறு நவீனமுறைகள் பின்பற்றபட்டு வருகின்றன. நகரப்பிரதேசங்களில் மொட்டை மாடிகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்தும், கட்டடக்கூரைகளில் இருந்து விழும் மழைநீரை நிலத்தடியில் தொட்டிகள் அமைத்தும் சேகரிக்கும்முறைகள் காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்கப்படுகின்றது. அத்துடன் சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளைக்கிணறுகளை அமைத்தும் மழைநீரை பாரிய அளவில் சேமிக்கின்றன.


விவசாயப் புரட்சி காரணமாக இன்று செயற்கை உரங்கள் மற்றும் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீரில் தன்மை அற்றுப்போகிறது. மழைநீரை சேகரிக்கும் போது மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், மண் வளம் மேம்படுத்தவும்படுகின்றது.

தேவைக்கு அதிகமாக உள்ள மழை நீரை வீணாக்காமல், நிலத்திற்குள் செல்லுமாறு அமைப்புகளை ஏற்படுத்தினாலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். இதை ஒருசிலர் மட்டும் செய்தால் போதாது, அனைவரும் பின்பற்றவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். ஒவ்வொரு வீட்டின் கூரையில் இருந்து வீணாகும் மழை நீரை நிலத்திற்குள் செல்லும்படி அமைப்புகளை உருவாக்க கற்றுத்தரவேண்டும். விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற முறைகளை கற்றுத்தரவேண்டும்.

மிக அடிப்படையான நமது செயல்பாடுகளில் உடனடி மாற்றம் அவசியமாகிறது. நீரின் மதிப்பை பிரதிபலிக்கும் முறையில் நீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இதே வாழ்க்கை தரத்தை வருங்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல வேண்டுமானால் நீரை பாதுகாத்து சேமிக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்