தகுதி சிறுகதை

தகுதி! || Eligibility

ஆஸ்பெஸ்டாஸை வச்சு குடிசை மாதிரி போட்ருந்த அந்த சின்னோண்டு வீட்டுக்கு முன்னால, கிட்டத்தட்ட பாதி நரைச்சு போன தலையும், ஒல்லியான ஒடம்புமா இருந்த முத்துலட்சுமியோட பொணம் இருந்துச்சு. வயசு, அனேகமா ஒரு அம்பது இருக்கும்.

பந்தல், ஐஸ் பெட்டின்னு எதுவும் இல்ல. காட்டுரோஜாவும் ஜெவந்தியும் கலந்து கட்டுன மாலை ஒண்ணு மொழங்கால் வரைக்கும் நீளமா, நல்ல மொத்தத்துல போட்ருந்துச்சு. எழவு விசாரிக்க ஆளுங்க ஒருத்தரும் இல்லாம முத்துலட்சுமி கண்ணை மூடிக் கெடந்தா. தலமாட்டுல கொத்தா வச்சுருந்த ஊதுபத்திங்க ஜம்முனு வாசன பொகையை பரப்பிவுட்டுகிட்டு இருந்துச்சு.

இந்தத் தெருவு நல்லா நீளஅகலமா இருந்தாலும், கடைசீல நாப்பது அடி அகலத்துக்கு வாய்க்கா ஒண்ணு ஓடிகிட்டிருந்ததுனால முட்டுச்சந்து மாதிரி ஆகிப்போச்சு. இந்தப்பக்கம் அந்தப்பக்கம் தாண்டி போவமுடியாதுங்கறதுனால ஆள் நடமாட்டமெல்லாம் பெருசா எதுவும் இல்லாம எப்பவும் விரிச்சோன்னுதான் கெடக்கும்.

ஒரு காலத்துல இந்த தெருவுல அவ்ளோ மாடுங்க வளர்த்தாங்களாம். இந்த ஏரியா மொத்தத்துக்கும் இங்கேர்ந்துதான் பால் சப்ளை நடந்துருக்கும் போலருக்கு. பதினஞ்சு பதினாறு வயசுல இந்த தெருவுக்குள்ள வாக்கப்பட்டு வந்த செங்கமலம் கெழவிதான் இந்த கதையெல்லாம் சொல்லும்.

இப்ப என்னடான்னா ஒயரம் ஒயரமா, ஒரே கட்டடத்துல இருவது இருவத்தஞ்சு வீடுங்க, அங்கங்க பங்களா வீடுங்கன்னு தெருவே மாறிப்போச்சு. கதவ நல்லா இறுக்கி மூடிகிட்டு எல்லா பொம்பளைங்களும் உள்ளேயேதான் உக்காந்துருக்குதுங்க. முத்துலட்சுமி செத்துப்போன சேதிகூட அவுங்களுக்கெல்லாம் சரியா போய்ச் சேரலன்னா பாத்துக்கங்க.

மாரி மட்டும் முழங்கால கட்டிகிட்டு, பீடி குடிச்சுகிட்டு பொணத்த வுட்டு கொஞ்சம் தள்ளி உக்காந்துருந்தான். ’முத்துலட்சுமி செத்துப் போச்சு, கொஞ்சம் வந்துட்டுப் போடா’ன்னு ரத்தினம்தான் மாரிக்கு ஃபோன் பண்ணி கூப்ட்ருந்தான்.

“இந்தா புடி. இதுல பொருள்லாம் இருக்கு. என்னென்ன செய்யணுமோ செஞ்சுரு. தூக்கிட்டு போறதுக்கு மட்டும் முனிசிபாலிட்டியில சொல்லிக்கறேன்”

ரத்தினம் குடுத்த சின்னோன்டு சாக்குமூட்டைய மாரி வாங்கி பிரிச்சுப் பாத்தான். காட்டன் பொடவ, தேங்கா, பழம், பூவு, வெத்தல, மஞ்சதூளு, மாலைன்னு தேவைப்படற எல்லாமே இருந்துச்சு. வாய்க்காலேர்ந்து தண்ணிய தூக்கிட்டு வந்து, முத்துலட்சுமிய குளிப்பாட்டிவுட்டு, புது பொடவைய உடம்புல சுத்தி, மூஞ்சி பூரா மஞ்ச பூசி, பெரிய பொட்டு வச்சு, வைக்கோல தரைல பரப்பிவுட்டு படுக்க வச்சான்.

தெருவோட ஆரம்பத்துல, ஒரு பெரிய காம்பவுண்டுக்குள்ள தோட்டம்தொறவோட அன்னகாமாட்சி அம்மன் கோவில் இருக்கும். கட்டுன காலத்துலேர்ந்து இன்னைக்கிவரைக்கும் அதே ஓடு போட்ட கோவில்தான். இடிச்சு கட்டலாம்னு பாத்தப்போ ஒரு பொம்பள மேல அம்மா எறங்கி, ’எவனும் என் வீட்டுமேல கைய வைக்கக்கூடாது’ன்னு அலறுச்சு. பயந்துபோயி அதுக்கப்பறம் அப்புடியே வுட்டுட்டாங்க.

தெருவோட முக்காவாசிதூரம் ரெண்டு பக்கமும் வருசையா கட்டடம்தான். எல்லாத்தையும் தாண்டி போனீங்கன்னா அப்பறம் ஒரே கருவமுள்ளாதான் மண்டி கெடக்கும். அந்த முள்ளு மரத்தயெல்லாம் வெலக்கிட்டு பாத்தா பின்னால இடிஞ்சு போன ஓட்டு வீடுங்கள்லாம் மொட்ட செவுரா நின்னுகிட்டு இருக்கும். இங்க இருந்தவங்கள்லாம் ஒவ்வொருத்தரா அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த வீடுங்களை வித்துபுட்டு போயிருக்காங்க. யாருக்கு வித்தாங்க, எங்க போனாங்கன்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு மூஞ்சி தெரியாத ஆளுங்களா வந்து கார்ல எறங்குவாங்க. மிஷினை வச்சு, மண்டிக் கெடக்கற பொதரையெல்லாம் வழிச்சுவுட்டு, பூமி பூஜை போட்டு, பெருசு பெருசா கட்டடம் கட்ட ஆரம்பிப்பாங்க. இங்க இருக்கற ஒவ்வொரு கட்டிடமும் இப்புடிதான் வந்துச்சு.

இன்னைக்கிவரைக்கும் எல்லாத்தையும் உக்காந்த எடத்துலேர்ந்தே வேடிக்கை பாத்துகிட்டிருக்கறது, செங்கமலம் கெழவி மட்டும்தான். அதோட மவனுக்கு கலெக்டர் ஆபிஸுல வேல. வீட்டுக்குள்ள மருமவளுக்கும் இதுக்கும் சுத்தமா ஆவாது. பொழுதனைக்கும் திட்டிகிட்டே திண்ணைலதான் கெடக்கும் கெழவி. ’நான் பெத்த புள்ளைய கைக்குள்ள போட்டுகிட்டு ஜங்குஜங்குன்னு குதிக்கறா’ன்னு மருமவளை

இந்த வார்த்தைதான்னு இல்லாம அவ்ளோ பேச்சு பேசும். தெருவுல ஒருத்தர் இதை தாண்டி போயிடக்கூடாது. கூப்ட்டு வச்சு அவுங்களோட வீட்டு கதையையெல்லாம் விசாரிச்சு, அதுக்கு தெரிஞ்ச ஊர்க்கதையையெல்லாம் அவுங்ககிட்ட சொல்லி.. போதும் போதும்னு ஆக்கி வுட்ரும்.

முள்ளு ஏரியாவையெல்லாம் தாண்டி போனா, தெரு கடைசீல பீச்சாங்கை பக்கம்தான் முத்துலட்சுமி தங்கியிருந்த எடம். அதுக்கு எதிர்த்தாப்ல கொஞ்சம் தள்ளி பாத்தீங்கன்னா, பெரிய புங்கமரம் ஒண்ணு இருக்கும். அதை ஒட்டிதான் ரத்தினத்தோட வெல்டிங் பட்டறை இருக்கும். கிட்டத்தட்ட வாய்க்கா கரைதான் அது.

ரத்தினம் இதே ஊர்ல பொறந்து வளர்ந்த ஆளுங்கறதுனால கடைக்கி போர்டு, விசிட்டிங் கார்டுனு எதுவும் வச்சுக்கல. பழக்கவழக்கத்துலேயே ஏதாச்சும் ஒரு பெரிய ஆர்டர் வந்துகிட்டே இருந்துச்சு. நாலுபேரை வேலைக்கி வச்சுகிட்டு பிரச்சனையில்லாம ஓட்டிகிட்டிருந்தான்.

2

“எத்தனை மணிக்கு, எங்க செத்துப் போச்சு அந்தம்மா?” – முனிசிபாலிட்டியில அகலமான டேபிளுக்கு பின்னால உக்காந்துருந்த ஆளு ரத்தினத்துகிட்ட கேட்டாரு.

”செத்துப்போன டைம்லாம் கரெக்டா தெரியல சார். எப்பவும் காலைல நான் வர்றதுக்கு முன்னாடியே என்னோட பட்டறை வாசல்ல தண்ணி தெளிச்சு கோலமெல்லாம் போட்டு முடிச்சுரும். இன்னைக்கி கூட்டாமகொள்ளாம அப்புடியே வீட்டுவாசல்ல உக்காந்துருக்கற மாதிரி இருந்துச்சு. என்னடா, கழுத்து தொங்குன மாதிரி தெரியுதேன்னு சந்தேகப்பட்டு பக்கத்துல போயி பாத்தப்பதான் விஷயம் தெரிஞ்சுது”

“கொஞ்சம் கஷ்டமாச்சே. அனாதை பொணம்னா ரோட்டு ஓரத்துல எங்காச்சும் கெடக்கும், பப்ளிக் ஃபோன் பண்ணி சொன்னா வண்டி அனுப்பி தூக்கிட்டு போயிருவோம். ஆனா, இது வீட்டு வாசல்லேயே செத்து கெடந்துச்சுன்னு சொல்றீங்களே. அனாதை பொணம் லிஸ்ட்ல இதை சேக்கமுடியாதே”

முனிசிபாலிட்டி ஆளு தலையை சொறிஞ்சான்.

“உசுரு இருக்கறவரைக்கும் எங்கேயும் பிச்சை எடுக்கலையே தவிர, இப்பவரைக்கும் இதுவும் அனாதையாதான் சார் கெடக்குது. இந்தம்மாவுக்குன்னு யாரும் கெடையாது.”

”நீங்க சாதாரணமா சொல்லிட்டுப் போயிருவீங்க. ’ஒரு வீட்ல குடியிருந்துருக்கற பொம்பளைய, யாரோ சொன்னாங்கன்னு எப்புடிய்யா அனாதை பொணம்னு முடிவு பண்ணே’ன்னு நாளைக்கி எவனாச்சும் கெளம்பி வந்து நின்னான்னு வைங்க, மொத்த பிரச்சனையும் எனக்குதான்”

ரத்தினம் பேசாம இருந்தான். ’அது ஒண்ணும் வாடகை வீட்லயெல்லாம் குடியிருக்கல’ன்னு சொல்லலாம்னு பாத்தான். அதைச் சொன்னா, அதுலேர்ந்து வேற எதாச்சும் பிரச்சனைய இந்தாளு இழுத்துட்டு வருவானோன்னு தோணவும் பேசாம இருந்துட்டான்.

“ஒண்ணு பண்ணுங்க. நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு போயி இந்த விஷயத்தை சொல்லுங்க. அவங்க கேஸ் எதுவும் ஃபைல் பண்றதுன்னா பண்ணிட்டு, நம்ம ஆபிஸுக்கு தகவல் குடுக்கட்டும். அதுக்கப்பறம் என்னென்ன பண்ணனுமோ அதையெல்லாம் பண்ணிக்கலாம். எனக்கும் ரிஸ்க் கம்மியாயிரும் பாருங்க.”

”அதெல்லாம் பெரிய வேலையா இழுத்துகிட்டே போகுமே சார்”

ரத்தினம் கவலையோட கேட்டதை அந்தாளு கண்டுக்கவே இல்ல. இவனை அப்புடியே வுட்டுட்டு அங்க வந்துருந்த மத்தவங்ககிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். ரத்தினம் எழுந்திருச்சு யோசிச்சுகிட்டே வெளிய வந்தான். ஃபோனை எடுத்து அவனுக்கு தெரிஞ்ச ஒரு ஆளோட நம்பரை போட்டான். பிச்சைன்னு பேரு. இந்த ஏரியாவுல ஏற்கனவே கவுன்சிலரா இருந்த ஆளு.

“சும்மா ஏதாச்சும் காரணம் சொல்லணும்னு சொல்லுவானுங்க ரத்தினம். இதுலயெல்லாம் அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரப் போறதில்ல. காசுக்கு அடி போடறதுக்குதான் இவ்ளோ பில்டப் பண்ணியிருப்பான் அவன். உன்னை யாரு அங்க நேர்ல கெளம்பி போவ சொன்னது? பொணத்தை தூக்கி ரோட்ல போட்டுட்டு, பப்ளிக் பூத்லேர்ந்து ஃபோன் பண்ணவேண்டியதான நீ?”

“அய்யய்யோ.. இத்தனை வருஷமா அந்தம்மா நம்ம கண்ணு முன்னால இருந்துருக்குண்ணேன். அதைப் போயி ரோட்ல தூக்கிப் போட்டு..”

”தொல்லை இல்லாம வேல முடிஞ்சுருக்கும்லப்பா, அதுக்காக சொன்னேன். பாவ புண்ணியமெல்லாம் பாத்துகிட்டு இருந்தா இப்புடிதான் சிக்கல்லாம் வரும்.”

”நானே ஒரு வண்டிய வச்சு காட்டுக்கு அனுப்பி வுட்றலாம்னுதாண்ணேன் பாத்தேன். வெட்டியான்கிட்ட விசாரிச்சப்ப அவன்தான் சொன்னான், யாரு என்னன்னு தெரியாத ஆளுன்னா முனிசிபாலிட்டி மூலமா வந்தாதான் கரெக்டா இருக்கும்னு.”

”சரி சரி.. அந்தாளு எவ்ளோ எதிர்பாக்கறான் என்னன்னு பியூன் எவனையாச்சும் கூப்ட்டு விசாரி, தெரிஞ்சுரும். குடுத்துட்டா எல்லாத்தையும் அவனே பாத்துக்குவான்”

பிச்சை சொன்னமாதிரியே பியூனை கூப்புட்டு விசாரிச்சு, பணத்தை குடுத்துட்டு கெளம்புனான் ரத்தினம்.

3

ரத்தினம் இளம் ரத்தமா இருந்தப்பவே இந்தத் தெருவுல வெல்டிங் பட்டறைய போட்டு உக்காந்துட்டான். ஏற்கனவே சொன்னமாதிரி அப்ப இங்க இருந்ததெல்லாம் சாதாரண வீடுங்கதான்.

ஒருநாளு, ஆறேழு வயசு பையன் ஒருத்தனை கையில புடிச்சுகிட்டு, ஒரு மூட்டை துணியோட இந்த தெருவுக்குள்ள வந்தா முத்துலட்சுமி. ரொம்ப சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிகிட்டா போலருக்கு, பாவம்.

கண்ல பட்ட பொம்பளைங்ககிட்டயெல்லாம் வீட்டுவேல இருந்தா குடுங்க, வீட்டுவேல இருந்தா குடுங்கன்னு கெஞ்சிகிட்டே வந்தா. அவளோட மவன் குமாரு அப்பாவியா வேடிக்கை பாத்துகிட்டு கூடவே வந்தான்.

தெருவுல இருந்த பொம்பளைங்கள்ல வேலைக்கி போற ஆளுங்கள்லாம் யாரும் பெருசா இல்ல. அவங்களுக்கு வீட்டு வேல ஒண்ணுதான் வேலையாவே இருந்துச்சு. அதையும் இவகிட்ட தூக்கி குடுத்துட்டு மாமியாகாரிகிட்ட யாரு வாங்கி கட்டிக்கறதுன்னு ’வேலையெல்லாம் எதுவும் இல்ல’ன்னு கைய விரிச்சாங்க எல்லாரும்.

வெளியூர்ல செட்டிலாயிட்ட ஒருத்தரோட வீட்டு திண்ணை ஒண்ணு வசதியா முத்துலட்சுமிக்கு கெடைச்சுச்சு. ரெண்டுபேரும் அங்கேயே தங்கிக்க ஆரம்பிச்சாங்க. புள்ளையோட இருக்கறதுனால, தெருவுல இருக்கவங்களுக்கு மனசு கேக்கல. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வேளாவேளக்கி சோத்தை போட்டு குடுத்தாங்க. வீட்ல கட்டாம வச்சிருந்த சேலைங்களையும், புள்ளைங்களுக்கு பத்தாம போயி போடாம வச்சுருந்த நல்ல சட்டைங்களையும் குடுத்தாங்க. அனுசரனையோட அவங்க குடுத்தாலும், வேலவெட்டி ஏதும் செய்யாம கைநீட்றதுக்கு முத்துலட்சுமிக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. வேணாம்னு சொல்லவும் முடியாத நெலமை, என்ன பண்ணுவா அவ. வாங்கிகிட்டா.

விடிஞ்சதும் அரை வெளிச்சமா இருக்கும்போதே அவசரம் அவசரமா வாய்க்காலுக்கு போயி குளிச்சு முடிச்சு பொடவையயெல்லாம் தொவச்சுருவா. அப்புடியே வாய்க்கா ஓரமா இருக்கற செடிகொடிங்க மேலேயே துணிங்களை காயப்போட்டுட்டு வந்துருவா.

நாள்பூரா தெருவுலேயே கெடக்கற குமாரை என்ன ஏதுன்னு கேக்காம அவன் இஷ்டத்துக்கு வெளையாட வுட்டுட்டு, சாயந்தரமா இழுத்துட்டுப் போயி தண்ணில முக்கி எடுப்பா. கத்த முடியாம மூச்சு தெணறி, தட்டுத் தடுமாறி தப்பிச்சு கரைக்கு ஓடி வருவான் அவன். துணிக்கு போட்ட சவக்காரத்தையே அவனுக்கும் போட்டு அலசிவிட்ருவா. ’இவ்ளோநேரம் வெயிலடிச்சும் எப்புடிம்மா தண்ணி ஜில்லுன்னு இருக்கு’ன்னு கொழப்பத்தோட கேப்பான். ‘காலைலதாண்டா வெதுவெதுன்னு இருக்கும். சாயங்காலம் அப்புடிதான் ஜில்லுனு இருக்கும்’னு புரியாத வெளக்கம் ஒண்ணு குடுப்பா.

தெருவுக்கு வந்து ஒரு ஒருவாரம் கழிச்சு ரத்தினத்துகிட்ட வந்து நின்னா முத்துலட்சுமி. பட்டறை வாசலை கூட்டி பெருக்கி கோலம் போடட்டுமான்னு கேட்டா. ’இந்த பட்டறைக்கி எதுக்கு கோலமெல்லாம்? எப்பேர்ப்பட்ட கோலம் போட்டாலும், இரும்பையெல்லாம் இழுத்துப் போட்டு வெல்டிங் வேல செய்ய ஆரம்பிச்சா பத்து நிமிஷத்துல எல்லாமே காணாம போயிரும்..’ பதில் சொல்றதுக்கு யோசிச்சவன், வயித்து பொழப்புக்காக கேக்கறாளே, எப்புடி வேணாம்னு சொல்றதுன்னு தயங்குனான்.

”சம்பளம் எவ்வளவு வேணும்?”

“நீங்களா பாத்து குடுங்க”

அடுத்தநாளு வெளக்கமாரு ஒண்ணும், டப்பா நெறய கோலமாவும் வாங்கி கொண்டாந்து வச்சுட்டான் ரத்தினம்.

4

முத்துலட்சுமி செத்துப்போனது காத்துவாக்குல தெருவுல இருக்கவங்களுக்கெல்லாம் தெரிய ஆரம்பிச்சுருச்சு போலருக்கு. ஒவ்வொருத்தரா வந்து தூரத்துல நின்னு உச்சுகொட்டிகிட்டே பாத்தாங்க. சிலபேரு, பக்கத்துல உக்காந்துருந்த மாரிய கூப்ட்டு எப்புடி செத்தான்னு விசாரிச்சுட்டு, அம்பதோ நூறோ அவன் கையில

திணிச்சுட்டு போனாங்க. எதிர்பாராத வரும்படி அவனுக்கு. சந்தோஷமா வாங்கி இடுப்புல சுருட்டிகிட்டான்.

அந்நேரம் பாத்து, கான்ஸ்டபிள் ஒருத்தரு பைக்ல வந்து எறங்குனாரு. கொஞ்சதூரத்துலயே வண்டிய நிறுத்திட்டு நடந்து வந்தாரு. தொப்பிய கழட்டிட்டு, கர்ச்சீப்ப வச்சு வழுக்க மண்டைய நல்லா அழுத்தி தொடச்சவரு, பொணத்துக்கு பக்கத்துல வந்து நின்னு, காக்கா மாதிரி தலைய சாச்சு முத்துலட்சுமியோட மூஞ்சிய பாத்தாரு. திரும்பவும் தொப்பிய போட்டுகிட்டே மாரிகிட்ட வந்தாரு. அவன் அவசரமா எழுந்துருச்சு வணக்கம் வச்சுட்டு கைய கட்டிகிட்டு நின்னான்.

“யாருய்யா ரத்தினகுமாரு?”

“இந்தா.. எதிர்த்தாப்ல பட்டறை வச்சுருக்கவருங்கய்யா. வெளில போயிருக்காரு”

”ம். நீயி?”

“நான் வாளாடியில இருக்கேன்யா. இதையெல்லாம் ரெடி பண்றதுக்காக வரச் சொல்லியிருந்தாருங்க”

“பேரு?’

“மாரி.. மாரியப்பன்ங்க”

”நீதான் இதை குளிப்பாட்டுனியா?”

“ஆமாங்க”

“உடம்புல எங்காச்சும் காயம்கீயம் இருந்துச்சா? நல்லா யோசிச்சு சொல்லு”

“அப்புடியெல்லாம் எதுவும் இல்லீங்க”

”உன் அட்ரஸை சொல்லு”

அட்ரஸையெல்லாம் கேக்கவும் அவனுக்கு சின்னதா பயம் வந்தாலும், வேற வழியில்லாம சொன்னான். பேண்ட் பாக்கெட்லேர்ந்து சின்ன நோட்டு ஒண்ணை எடுத்து, எல்லாத்தையும் கிறுக்கலா எழுதிகிட்டு ரத்தினத்தோட பட்டறைய பாத்து போனாரு. உள்ள இருந்த இரும்பு ஸ்டூல எடுத்து அவரு வசதிக்கு இழுத்துப் போட்டுகிட்டு உக்காந்தாரு.

“என்னப்பா, ரத்தினகுமார்தான் பட்டறை ஓனரா?”

வேலை பாத்துகிட்டிருந்த பசங்களை பாத்து சத்தமா கேட்டாரு.

“ஆமாங்க”

“தண்ணி கொஞ்சம் குடு”

சொம்புல தண்ணிய புடிச்சு குடுத்தாங்க பசங்க. குடிச்சு முடிச்சு லேசா ஏப்பம் வுட்டாரு.

“எங்கப்பா போயிருக்காரு அவுரு? வர லேட்டாவுமா?”

“இல்ல சார். இப்ப வந்துருவாரு”

“ஃபோனை போட்டு சீக்கிரமா வரச் சொல்லு”

5

ஒரு பத்து பதினைஞ்சு நாள் இருக்கும். திரும்பவும் பட்டறை வாசலுக்கு வந்து ரத்தினத்துக்கு முன்னால நின்னா முத்துலட்சுமி.

“தெருவுல இருக்கவங்ககிட்ட சும்மாவே சோறு வாங்கி சாப்புடறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு. யாரும் வேலையும் குடுக்க மாட்றாங்க. கொஞ்சம் உதவி பண்ணீங்கன்னா நல்லாருக்கும். சொந்தமா ஒழச்சு சாப்ட்டுக்குவேன்”

மொட்டையா உதவின்னு கேக்கவும் அவனுக்கு ஒண்ணும் புரியல. ‘பணம் காசு எதுவும் கேக்குறாளோ?’

”இந்த தெருவுலயும் அக்கம்பக்கத்து தெருவுங்கள்லயும் துணி தேய்க்கறதுக்கு ஆளு இல்லாம இருக்கு. எங்கேர்ந்தோ வந்து வாங்கிட்டு போறாங்க. அந்த வேலைய நான் பண்ணுனா கொஞ்சம் காசு வரும்னு பாக்கறேன். அதான்..”

”ஓஹோ”

யோசிச்சுகிட்டே மெதுவா எழுந்துருச்சு உள்ள போனான். மிச்சமீதி கெடக்கற இரும்பு கம்பிங்க, செவுத்தோரமா சாஞ்சு கெடக்கற தகரம்னு எல்லாத்தையும் நவுத்தி நவுத்தி பாத்துட்டு வெளில வந்தான்.

“என்கிட்ட இருக்கற பொருளுங்களை வச்சு டேபிள் மாதிரி பண்ணித் தர்றேன். இஸ்திரி பெட்டி, மத்த பொருளெல்லாம் வாங்கணுமே, அதுக்கு என்ன பண்ணுவ?”

அவ பதில் எதுவும் சொல்லாம நெளிஞ்சுகிட்டே நின்னா. அப்பதான் அவனுக்கு உறைச்சுது, மொத்தமா எல்லாத்துக்கும் சேத்துதான் நம்மகிட்ட உதவி கேட்ருக்கா போலருக்குன்னு.

“சரி. பித்தள இஸ்திரி பெட்டி ஒண்ணு, டேபிளுக்கு மேல பந்தல் மாதிரி போட்டுக்கறதுக்கு பெரிய பிளாஸ்டிக் சீட்டு, பேட்டரி லைட்டெல்லாம் வாங்கித் தர்றேன். தெனமும் வர்ற காசுல கொஞ்ச கொஞ்சமா திருப்பி குடுத்துரு”

சந்தோஷத்துல கையெடுத்து கும்பிட்டுகிட்டே ’சரி’ன்னு தலையாட்டுனா.

சொன்னமாதிரியே ரெண்டு மூணு நாள்ல விறுவிறுன்னு எல்லாத்தையும் பண்ணிக் குடுத்துட்டான். அன்னகாமாட்சிய கும்புட்டுட்டு வந்து, அவ தங்கியிருந்த வீட்டு வாசல்கிட்டயே கடைய போட்டுகிட்டா.

அவ கணக்கு போட்டமாதிரியே, தெருவுல எல்லார் வீட்டு சட்டையும் பேண்ட்டும் இவகிட்டதான் வந்துச்சு. பட்டுப்புடவைங்க வரும்போது மட்டும் கொஞ்சம் படபடப்பா இருக்கும் அவளுக்கு. தொழிலுக்கு புதுசுங்கறதுனால எதாச்சும் எக்குதப்பா ஆயிருச்சுன்னா என்ன பதில் சொல்றதுன்னு பயம். கைய வச்சு சூடு பாத்து பாத்து தேய்ப்பா.

தேய்க்க ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் கையெல்லாம் வலி பின்னி எடுத்துச்சு. அவளோட துணியைக் கூட துவைச்சு போடமுடியாத நெலமை. வேற வழியில்லாம பல்லைக் கடிச்சுகிட்டு வலியோட எல்லாத்தையும் பழக்கப்படுத்திகிட்டா.

அடுப்பு கரி ஒண்ணுதான் தெனச்செலவா இருந்துச்சு அவளுக்கு. மத்தபடி சாப்பாடு டீ செலவு போக, மீதிய ரத்தினத்துக்கு கரெக்டா குடுக்க ஆரம்பிச்சுட்டா. சில நாளுங்கள்ல துணி கம்மியா வந்துச்சுன்னா அன்னைக்கி மட்டும் காசு குடுக்கமுடியாது. விட்ருவா. ’இன்னைக்கி காசு தரலையே’ன்னு அவனும் என்னைக்கும் கேட்டது கெடயாது. இவளா பாத்து குடுக்கறதுதான்.

எத்தனை நாளைக்கி எவ்வளவு பணம் குடுக்கணும், இதுவரைக்கும் எவ்வளவு குடுத்துருக்கோம்னு எதுவும் முத்துலட்சுமிக்கு தெரியாது. தெனமும் குடுத்துகிட்டே இருந்தா.

ஆனா, ரத்தினம் அப்புடி இல்ல. குடுக்கற காசையெல்லாம் கரெக்டா குறிச்சு வச்சுகிட்டான். ஒருநாளு அவ காசு குடுக்கும்போது, ‘நேத்தோட கணக்கு முடிஞ்சுருச்சு. இனிமே காசு வேணாம்’னு சொன்னப்போ அவளுக்கு அப்புடியொரு சந்தோஷம்.

வழக்கம்போல ஒருநாளு, செங்கமலம் கெழவியோட வீட்டுக்கு துணி எடுக்க போனா முத்துலட்சுமி. மவனோட துணிங்க எல்லாத்தையும் குடுத்துட்டு, அவளை கொஞ்சம் திண்ணைல உக்கார சொல்லுச்சு அந்த கெழவி. உக்கார்றதுக்கு யோசிச்சா. ’பரவால்ல உக்காரு’ன்னு திரும்ப திரும்ப அழுத்தி சொன்னதும் மெதுவா உக்காந்தா. ’காப்பி தண்ணி எதுவும் குடிக்கிறியா’ன்னு கேட்டுச்சு. இப்புடியெல்லாம் நம்மகிட்ட பேசற ஆளு இல்லியே இதுன்னு ரொம்ப ஆச்சரியமா போச்சு அவளுக்கு. ’இல்ல, அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’னா. அடுத்ததா குசுகுசுன்னு கெழவி ஒண்ணு கேட்டுச்சு.

“ஆமா, ரத்தனம் தம்பிதான் உனக்கு கடையெல்லாம் வச்சு குடுத்துச்சாமே? நெசமாவா?”

எதிர்பாராத கேள்வின்னாலும் யோசிக்கறதுக்கு இதுல வேல இல்லியேன்னு ’ஆமா’ன்னு தலையாட்டுனா.

“நானும் இவ்ளோநாளா இதே திண்ணைலதான் கெடக்கறேன், தெரியல பாரேன். இப்பதான் அரசபுரசலா என் காதுக்கு சேதி வந்துச்சு. ரத்தனம் எதுவும் சொந்தமா ஒனக்கு?”

கேள்வி சுத்தமா புடிக்கல அவளுக்கு. ’நாம ஒரு அனாதை நாயின்னு நல்லா தெரிஞ்சே இப்புடி கேக்குதே இது?’

“இல்ல”

“சரி சரி. சும்மாதான் விசாரிச்சேன். நீ போயி வேலைய பாரு”

கெழவி இப்புடி கேட்டுச்சுன்னு சொன்னா கேக்கறவங்களுக்கு சாதாரணமாதான் இருக்கும். ஆனா, அது கேட்ட வெதம் இருக்கே.. துணிய எடுத்துகிட்டு அங்கேர்ந்து நகரவும் முடியாம, நிக்கவும் முடியாம கெடந்து நெளிஞ்சா பாவம். அவ ஒரு நாலஞ்சு அடி எடுத்து வச்சுருப்பா. ’அழிஞ்ச கொல்லையில குதிரை மேய்ஞ்சா என்ன, கழுதை மேய்ஞ்சா என்ன’ன்னு முணுமுணுத்துச்சு அந்த கெழவி. தலையில இடி எறங்குன மாதிரி இருந்துச்சு அவளுக்கு. கண்ணு கலங்கி போச்சு.

’இப்பதான் சேதி வந்துச்சுன்னு சொல்லுதே. அப்புடீன்னா, மத்தவங்க யாரும் இதுகிட்ட தப்பா சொல்லியிருப்பாங்களா? நம்மகிட்ட கேட்டமாதிரி ரத்தினத்தையும் ரோட்டுல நிறுத்தி கேட்டுச்சுன்னா? நேர்லயே இப்புடி பேசற கெழவி, பின்னால என்னென்னல்லாம் பேசுமோ தெரியலையே? ரத்தினத்தோட வீட்டுக்கெல்லாம் வேறமாதிரி ஏதும் சேதி போய் சேர்ந்துச்சுன்னா என்னாவும்? நமக்கு நல்லது பண்ண போயி இந்தமாதிரி உபத்தரவமெல்லாம் தேவையா அந்த நல்ல மனுஷனுக்கு?’

உள்ளூர ஏகப்பட்ட கேள்வி, பயம், கொழப்பம்னு எல்லாம் ஒண்ணு சேர்ந்துகிச்சு. அன்னைக்கி நைட்டு பூரா ஒழுங்கா தூங்காம சும்மா சும்மா முழிக்கறதும் யோசிக்கிறதுமாவே இருந்தா.

6

ரத்தினம் பட்டறைக்கு வந்து சேந்தான். கான்ஸ்டபிளுக்கு அவசரமா ஒரு வணக்கத்தை வச்சான்.

“என்னப்பா, முனிசிபாலிட்டியிலர்ந்து ஃபோன் பண்ணாங்க. நீதான் இந்தம்மா செத்துப் போனத பாத்துட்டு சொன்னியா?”

“ஆமா சார்”

“எவ்ளோ நேரமா வெயிட் பண்ணிகிட்டிருக்கேன் உனக்காவ”

“சின்ன வேலை ஒண்ணு இருந்துச்சு சார். அதான்..”

“எவ்ளோநாளா இங்க இருக்குது இந்த பொம்பள?”

முத்துலட்சுமி இங்க வந்தது, பொழச்சதுன்னு எல்லா வெவரத்தையும் கான்ஸ்டபிள்கிட்ட சொன்னான்.

”வீட்டுக்குள்ள கொஞ்சம் பாக்கணுமே. கூட வர்றியா?”

ரெண்டு பேரும் உள்ள போனாங்க. நொழஞ்சதும் நேரா ஒரு ஃபோட்டோ தொங்கிகிட்ருந்துச்சு. முத்துலட்சுமியும் பதினெட்டு வயசு குமாரும் குழுமாயி கோயிலு திருவிழா சந்தைல எடுத்துகிட்ட படம்.

“இவன்தான் பையனா?”

”ஆமா சார்”

“எப்புடி செத்தான்?”

“முதுகு ஒடிய வேல பாத்து வேளாவேளைக்கி அவனுக்கு சோறாக்கி போட்டுச்சே தவிர, மத்தநேரத்துல அவன் எங்க போறான், என்ன பண்றான்னு பாக்காம வுட்ருச்சு சார். அவன் என்னடான்னா தண்ணி, கஞ்சா, பீடின்னு எல்லா பழக்கத்தையும் பக்காவா கத்துகிட்டு பயங்கரமா செட்டு சேத்துகிட்டு சுத்த ஆரம்பிச்சுட்டான். கொஞ்சநாள்லயே எல்லாம் ஓவரா போயிருச்சு. அது சம்பாதிக்கறதையெல்லாம் அஞ்சு பைசா வுடாம எடுத்துட்டு போயிருவான். அழுதுபொரண்டு, கால்ல வுழுந்துகூட கெஞ்சி பாத்துச்சு. நானும் எத்தனையோ தடவ மெரட்டி பாத்தேன். எதுக்கும் மசியல சார் அவன். ஒருநாளு பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ரிக்ஷாவுல செத்து கெடந்தான்னு சொல்லி வீட்ல கொண்டாந்து போட்டுட்டு போனாங்க சார்”

சுத்திமுத்தி வீட்ட பாத்தாரு கான்ஸ்டபிள்.

“வீட்ல பொருள்லாம் எதுவும் இல்ல போலருக்கே”

“ஒரு அயன்பாக்ஸும் இங்க கெடக்கற நாலஞ்சு பொடவையும்தான் சார் அதோட சொத்தே.”

“ம். புருஷன் எங்க இருக்கான் என்ன ஏதுன்னு எதுவும் தெரியுமா?”

“அதப்பத்தியெல்லாம் இத்தனை வருஷத்துல எதுவும் சொன்னது கெடையாது சார். இத தேடி யாரும் வந்ததும் கெடயாது”

“வீடு சொந்தமா, இல்ல, வாடகைக்கு இருந்துச்சா?”

எப்புடி சொல்றதுன்னு யோசிச்சான்.

”இல்லீங்க. தங்கறதுக்கு எடம் இல்லன்னு அதுவாவே இந்த எடத்தை ரெடி பண்ணிகிச்சு”

”ஓ.. பொறம்போக்கு எடமா?”

“கரையோரமா இருக்கறதுனால பி.டபிள்யூ.டி எடமா கூட இருக்கலாம் சார். எனக்கு அதைப்பத்தி வெவரம் தெரியல”

“சரி சரி. என்னைக்காச்சும் இந்த பொம்பளைய பத்தி யாரும் வந்து விசாரிச்சாங்கன்னா இந்த வீட்லதான் இருந்துச்சுன்னு எதுவும் சொல்லிக்காத. வந்த காலத்துலேர்ந்து ரோட்டோரமாதான் படுத்து கெடந்துச்சுன்னு சொல்லு. அதேமாதிரி இந்த எடம் விஷயமா வேற யார்கிட்டேயும் நீயா போயி எதுவும் விசாரிக்க வேணாம்”. கான்ஸ்டபிள் சொன்னதுல ஏதோவொரு அர்த்தம் இருந்தது லேசா புரிஞ்சுச்சு ரத்தினத்துக்கு.

திரும்பவும் அந்த நோட்டை எடுத்து ஏதோ கிறுக்கிகிட்டு, வெளில வந்தாரு. ரத்தினமும் பின்னாலேயே வெளில வந்தான். நோட்டுக்கு நடுவுல நாலா மடிச்சு வச்சுருந்த பேப்பர் ஒண்ணை எடுத்தாரு.

”இந்தா.. இதுல ஒரு கையெழுத்து போடு”

”இது எதுக்கு சார்”

“எல்லாம் ஃபார்மாலிட்டிக்குதான்யா. நான் வந்து செக் பண்ணினதுக்கும், அனாதை பொணம்தான்கறதுக்கும் ஸ்டேஷனுக்கு சாட்சி வேணாமா”

அவரு காட்டுன எடத்துல கையெழுத்து போட்டான்.

“அப்ப.. கிளம்பட்டுமா?”

“சரி சார்”

நோட்டை பேண்ட் பாக்கெட்டுக்குள்ள திணிச்சுகிட்டே சாதாரண நடையவிட ரொம்ப மெதுவா நடந்து போனாரு. நடுவுல ஒருதடவ ரத்தினத்த திரும்பிப் பாத்தாரு. அவரு பைக்குகிட்ட போனதுக்கப்புறம் ரத்தினம் வேட்டிய மடிச்சு கட்டிகிட்டே பட்டறைக்குள்ள வந்துட்டான்.

பொறுமையா சட்டைய கழட்டி ஆணியில மாட்டிட்டு திரும்புனா, மாரி பக்கத்துல வந்து நின்னான்.

“அண்ணேன்”

“என்ன மாரி?”

“அந்த போலீஸ்காரு உன்கிட்ட எதாச்சும் வாங்கிட்டு வர சொன்னாருண்ணேன்”

”ஏதாச்சுமா?”

அவ்ளோ மெதுவா அந்தாளு நடந்து போனதுக்கு அப்பதான் காரணம் உறைச்சுச்சு அவனுக்கு. ஆணியில மாட்ன சட்டைய எடுத்து பாக்கெட்லேர்ந்து ரெண்டு நூறு ரூவா நோட்டுங்கள எடுத்து மாரிகிட்ட குடுத்தான்.

“என்னண்ணே இது, இருநூறு ரூவா குடுக்கற? ஏதாச்சும் சொன்னாருன்னா”

“ஏன் இருநூறு ரூவா காசா தெரியலயா? போதும் போதும் போ. சும்மா கடமைக்காவ ரெண்டு கேள்வி கேட்டுட்டு போற ஆளுக்கு இதுவே அதிகம். பொணத்த தூக்குறவனுக்காச்சும் சேத்து குடுக்கலாம்.”

மாரி தயங்கிகிட்டே அங்கேர்ந்து போனான். உள்ள மறைஞ்சமாதிரி நின்னுகிட்டு ஜன்னல் இடுக்கு வழியா கான்ஸ்டபிளையும் மாரியையும் பாத்துகிட்டுருந்தான் ரத்தினம். அந்தாளு ஏதோ கடுப்பா பேசறதும், மாரி பேசாம கைய கட்டிகிட்டு நிக்கறதும் தெரிஞ்சுச்சு. கடைசீல, மாரி தலைய குனிஞ்சுகிட்டே அவன் எடத்துலயே போயி உக்காந்துகிட்டான். கான்ஸ்டபிள் பட்டறைய பாத்து நடந்து வர ஆரம்பிச்சாரு. யோசிச்சான் ரத்தினம்.

“மணி, நான் பாத்ரூமுக்கு போறேன். எப்புடியாச்சும் அந்தாளை சமாளிச்சு அனுப்பி வுட பாரு. ரொம்ப பேசுனா உக்கார வையி”

7

முத்துலட்சுமிக்கு யாருகிட்ட சொல்லி பொலம்பறதுன்னு தெரியல. இந்த காதுல வாங்கி அந்த காதுல வுட்டுட்டு போறமாதிரி விஷயமாவும் இல்ல. நேரா கோயிலுக்கு போயி அம்மனை பாத்துகிட்டே கொஞ்சநேரம் அழுதுகிட்ருந்தா. ரத்தினத்துகிட்டேயே இந்த விஷயத்த பேசிட்டா பரவால்லன்னு மனசுல பட்டுச்சு.

“என்னாது.. வேற ஏரியாவுக்கு போறியா? ஏன், யாராச்சும் காலி பண்ண சொன்னாங்களா? என்ன பிரச்சனை இங்க?” – வெல்டிங் வச்சுகிட்டே புரியாம கேட்டான் ரத்தினம்.

“இல்ல. அப்புடியெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல”

“அப்பறம் எதுக்கு திடீர்னு வேற ஏரியா போறேங்கற? புரியல எனக்கு”

கொஞ்சநேரம் பேசாம நின்னா.

“சொல்லு. போவணும்னா எதாச்சும் காரணம் இருக்கணும்ல”

“அது.. அந்தம்மா..”

வேலைய நிறுத்திட்டு நிமிந்து பாத்தான்.

“அதான், அந்த செங்கமலம் ஒரு மாதிரியா பேசுது. கேக்க கஷ்டமா இருக்கு”

கண்ணை தொடச்சுகிட்டே விஷயத்த சொன்னா.

“அப்புடி என்னத்த தப்பா விசாரிச்சுருச்சு? நான்தான் உதவி பண்ணேனா, சொந்தக்காரனான்னு ரெண்டு கேள்வி கேட்ருக்கு. ஆமா இல்லன்னு சொல்லிட்டு நம்ம வேலைய பாக்கறத விட்டுட்டு எதுக்கு தேவையில்லாம அதைப் போயி பெருசு பண்ணிகிட்டு இருக்க?”

“இல்ல. அது சாதாரணமா கேக்கல”

“அந்த கெழவி எப்புடியோ கேட்டுட்டு போயி தொலையட்டும். அதுனால என்ன பிரச்சனை இப்ப? காவடி பாரம் சொமக்கறவனுக்குதான் தெரியும். வேடிக்கை பாக்கறவனுக்கு என்ன? நம்ம வாழ்க்கைய மனசாட்சியோட நாம ஒழுங்கா பாத்துகிட்டா போதும். யாரு என்ன சொன்னாலும் கவலப்பட வேண்டியதில்ல, போ. போயி வேலைய பாரு”

அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு முத்துலட்சுமிக்கு தெரியல. அவன் இப்புடி முடிச்சுவிட்ட மாதிரி பேசுனதுக்கப்புறமும் திரும்ப திரும்ப அதையே இழுத்துகிட்ருக்கறதுக்கு ஒருமாதிரி இருந்துச்சு. மெதுவா அங்கேர்ந்து போயிட்டா.

முத்துலட்சுமியோட வாய மூடறதுக்காக ரத்தினம் அப்புடி சொல்லிட்டானே தவிர, அவ சொல்லும்போது அவனுக்கும் சுருக்குன்னுதான் இருந்துச்சு. போயி, அந்தக் கெழவிய நாலு வாங்கு வாங்கிட்டு வரலாமான்னு தோணுச்சு. ரோட்ல நின்னு பிரச்சனை பண்ணி, இல்லாத விஷயத்த நாமளே தண்டோரா போட்டு ஊருபூரா பேசிக்கறமாதிரி பண்ணிட்டோம்னா என்ன பண்றதுன்னு பேசாம இருந்துட்டான்.

தெருவுல இருக்கற மத்த புள்ளைங்கள பாத்துட்டு குமாரையும் படிக்க வைக்கணும்னு ஆசைபட்டா முத்துலட்சுமி. நாலஞ்சு தெருவுங்க தள்ளி இருந்த ஓட்டு பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டுப் போனா.

”ஏம்மா, கவர்மெண்ட்டே சோறு போட்டு படிக்க வைக்கிது. அப்புடியும் காலாகாலத்துல கொண்டாந்து சேத்துவிடாம இப்புடி வயசு தாண்டி போயி இஷ்டத்துக்கு கூட்டிட்டு வந்தா என்னம்மா அர்த்தம்? ஆனாஆவன்னா

தெரிஞ்சாலாவது வயசுக்கு தகுந்தமாதிரி எதுலயாச்சும் போட்டுவிட்ருவேன். இவனை நான் எந்த கிளாஸ்லன்னு போடறது சொல்லு?”

சலிப்போட தாவாங்கட்டைல கைய வச்சுகிட்டு யோசிச்சாரு ஹெட்மாஸ்டரு. இவளுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.

”ரெண்டுநாள் கழிச்சு வாம்மா. சொல்றேன்”

ஸ்கூலுக்கு போறேன்னு பாக்கற பசங்ககிட்டயெல்லாம் பூரிப்பா சொல்லிகிட்டே வந்த குமாரோட மூஞ்சி பயங்கரமா வாடிப்போச்சு. அதைப் பாத்ததும் அவளுக்கும் பொசுக்குனு கண்ல தண்ணி வந்துருச்சு. கவர்மெண்டு ஸ்கூலுதானே, அழைச்சுட்டு போனா அப்புடியே சேத்துக்குவாங்கன்னு அசால்ட்டா போனவளுக்கு இப்புடியெல்லாம் பதில் வரும்னு தெரியாம போயிருச்சு.

8

கக்கூஸ்லேர்ந்து வந்த ரத்தினம், வாசல்ல கான்ஸ்டபிள் நின்னுகிட்டிருக்கறத பாத்ததும் தயங்கிகிட்டே பக்கத்துல போனான்.

“சொல்லுங்க சார்”

“என்னா இது? இவ்ளோதான் கெடைச்சுதுன்னு ஸ்டேஷன்ல போயி சொன்னா இன்ஸ்பெக்டரு, எஸ்.ஐ.யெல்லாம் நம்புவாங்களா? நான் அமுக்கிட்டேன்னு நெனைக்கமாட்டாங்க? ஏம்ப்பா, போலீசுக்குன்னு ஒரு மரியாதை, மினிமம் அமௌன்ட்டெல்லாம் ஒண்ணு இல்லியா?”

குடுத்து வச்சமாதிரி அந்தாளு கேக்கவும் கோவம் சுள்ளுன்னு வந்துருச்சு அவனுக்கு.

”சார், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. மனுஷங்க உசுரோட இருக்கற வரைக்கும் எல்லா வழியிலயும் வருமானம் பாக்கறீங்க. போயி சேந்ததுக்கப்பறமும் எப்புடி சார் இப்புடியெல்லாம் கேக்கமுடியுது உங்களால?”

”ஹலோ.. என்னா..”

பயங்கரமா மொறச்சாரு கான்ஸ்டபிள்.

“என் பாக்கெட்டுலேர்ந்து காசு எடுத்து குடுக்கற கடுப்புல பேசறேன்னு நெனைக்காதீங்க. உண்மையிலயே வேதனையிலதான் சார் சொல்றேன். அடுத்தவேளை சோத்துக்கே வழியில்லாம இந்த ஊருக்கு வந்த பொம்பள இது. யார்கிட்டேயும் சோத்துக்கு கையேந்தி நிக்கக்கூடாதுன்னு கடைசிவரைக்கும் உழைச்சு

சாப்ட்டுட்டு உசுரை வுட்ருக்கு. செத்ததுக்கப்புறம் நமக்கு இப்புடியெல்லாம் செலவு வரும்னு தெரிஞ்சிருந்தா, அதுக்கும் சேத்தே சம்பாதிச்சு வச்சிட்டு போயிருக்கும்”

சொல்லிகிட்டே ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டுனான் ரத்தினம்.

”அதோட சாவுல யாருக்கும் குறை வைக்கவேணாம்னு நெனைக்கறேன் சார். இந்தாங்க, சந்தோஷமா போங்க”

அவன் அவ்ளோ பேசுனதுக்கப்பறமும் அந்த காசை வாங்கலாமா வேணாமான்னு கொஞ்சங்கூட உறுத்தலெல்லாம் இல்ல அந்த ஆளுக்கு. யோசிக்காம வாங்கிகிட்டாரு. பட்டறைல வேலை பாக்கற பசங்க அத்தனை பேரும் ரொம்பக் கேவலமா பாத்துகிட்டிருந்தானுங்க. எதப்பத்தியும் கவலப்படாம பணத்த பாக்கெட்டுல வச்சுகிட்டு பைக்கு பக்கத்துல போயி நின்னு ஃபோனை கையில எடுத்தாரு.

”செல்வம், தேவி தியேட்டருக்கு முன்னால லெஃப்ட்ல ஒரு தெருவு போவுதுல்ல. ஆமாமா.. திலகவதி தெருவுதான். அதுல, கடைசீல கரையை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு போட்டு ரூமு ஒண்ணு இருக்கு. அதை கொஞ்சம் பக்கா பண்ணி காம்பவுண்டு, இரும்பு கேட்டெல்லாம் போட்டு வுடணும். ஃப்ரீயா இருக்கும்போது வந்து பாத்துட்டு என்ன செலவாவும் என்னன்னு சொல்லு”

பேசி முடித்து ஃபோனை வைத்துவிட்டுச் சென்றார் கான்ஸ்டபிள்.

9

அன்னைக்கி நைட்டு மணி ஒரு ஏழு, ஏழரை இருக்கும். மழைன்னா மழை அப்புடி ஒரு மழை. பேய்காத்து மாதிரி அடிச்சுகிட்டே மழை கொட்டுனதுல இஸ்திரி டேபிள்ல பரப்பி வச்சுருந்த ஜமுக்காளமெல்லாம் சுத்தமா நனஞ்சு போச்சு. தேய்க்கறதுக்காக வாங்கி வச்சுருந்த துணியெல்லாம் பறந்துகெறந்து வாய்க்கா பக்கம் போயிருமோன்னு அவசர அவசரமா எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடுனவ, நனஞ்சுடாம திண்ணையில ஒரு ஓரமா பத்திரப்படுத்துனா.

ஆறு மாதிரி தண்ணி ஓடிகிட்டிருந்த அந்த நேரம், வாசல்ல கார் ஒண்ணு மெதுவா வந்து நின்னுச்சு. மழை எவ்ளோ கனமா பெய்யுதுன்னு காரோட லைட்டுல நல்லா தெரிஞ்சுச்சு. நின்ன கார்லேர்ந்து ரொம்பநேரமா யாரும் எறங்கலயேன்னு பாத்துகிட்டே இருந்தா முத்துலட்சுமி. ’அம்மா காரும்மா.. காரும்மா’ன்னு குமாரு வேற மூச்சுவிடாம சொல்லிகிட்டேயிருந்தான். ’தெரியுதுடா. சும்மா இரு’ன்னு அதட்டுனா.

கொஞ்சநேரம் கழிச்சு, பின்பக்க கதவ தொறந்துகிட்டு ஒரு பெரிய குடை வெளில வந்துச்சு. அறுபது வயசு ஆளும், அவரோட பொண்டாட்டியும் நனைஞ்சுடாம வண்டிய வுட்டு எறங்கி, நிதானமா படியேறி திண்ணைக்கி வந்தாங்க. வழுக்கி விட்றபோவுதுன்னு பாத்து பாத்து வந்தவங்களுக்கு, நிமிந்து முத்துலட்சுமிய பாத்ததும் கொழப்பம். இவளுக்கும் அவங்களை பாத்து கொழப்பம்.

“யாரும்மா நீயி?” – அவரு கேட்டாரு.

இப்புடி கேட்டவுடனேயே அவளுக்குள்ள ஒரு யூகம் வந்துருச்சு, இந்த வூட்டுக்காரங்களாதான் இருக்கணும்னு. லேசா படபடன்னு வந்துச்சு அவளுக்கு.

“பொழப்பு தேடி இந்த ஊருக்கு வந்தேங்க. வேலை எதுவும் கிடைக்கல. புள்ளய வச்சுகிட்டு, வேற வழி தெரியாம.. இந்த திண்ணையிலேயே தங்கி.. அயன் பண்ணிகிட்டு..”

“அப்புடியா? சரி சரி. நாங்கதான் இந்த வீட்டு ஆளுங்க. இப்ப இந்த வீட்டை வேற ஒருத்தருக்கு வெலை பேசியிருக்கோம். அனேகமா ஒரு வாரத்துல பத்தரம் பண்ற வேலையெல்லாம் முடிஞ்சுரும். அதுக்கப்பறம் ரெண்டு மாசம் இங்க இருந்துட்டுதான் காலி பண்ணப் பண்ணுவோம். நாங்க இருக்கறவரைக்கும் தாராளமா இருந்துக்கோ, ஒண்ணும் பிரச்சனையில்ல. இருந்துகிட்டே வேற ஒரு எடம் பாத்துகிட்டீன்னா உனக்கு நல்லது. ஏன்னா, வர்றவங்க வீட்டை எப்ப இடிப்பாங்க, என்ன சொல்லுவாங்கன்னு தெரியாது இல்லியா”

சொல்லிட்டு குமாரை பாத்தாரு.

“உன் பையனா?”

“அ.. ஆமாங்க”

”பேரு என்னடா?”

அவ சேலைக்கி பின்னால ஒளிஞ்சுகிட்டு எட்டி பாத்தமாதிரியே மெல்லிசா ‘குமாரு’ன்னான். சத்தமா சொல்லச் சொல்லி முத்துலட்சுமி குரல் கொடுத்ததும் இன்னொரு தடவை கொஞ்சம் சத்தமா பேரைச் சொன்னான்.

“பத்மா, அவனுக்கு பழம் பலகாரமெல்லாம் எடுத்து குடு. பையில வச்சுருக்கேன் பாரு.”

சொல்லிட்டு அவரு பூட்டை தொறக்க ஆரம்பிச்சாரு. அந்தம்மா பையில இருந்து பலகாரத்தையெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்து வச்சுச்சு. இதுவரைக்கும் அவன் பாத்துருக்காத இனிப்பு காரமெல்லாம் நிறைய அதுல இருந்துச்சு.

ரெண்டு பேரும் உள்ள போனதும் முத்துலட்சுமிக்கு மனசு கனத்து போச்சு. ’இத்தனை நாளா இந்த ஒரு பிரச்சனை இல்லாம இருந்துச்சே. இனிமே புதுசா எங்கேன்னு போறது?’

எந்த உறுத்தலும் இல்லாம அவ வீட்டு திண்ணை மாதிரியே நிம்மதியா படுத்து எழுந்திருச்சுகிட்ருந்தவளுக்கு, அன்னைக்கி நைட்டு இருப்பு கொள்ளல. சின்னதா ஒரு சத்தம் கேட்டாலும் அவங்கதான் வெளில வர்றாங்களோன்னு நெனச்சு முழிச்சு முழிச்சு வாசலை பாத்தா. அவங்க சொன்ன ரெண்டு மாசம் மனசுல நிக்காம, நாளைக்கே காலி பண்ண சொன்னமாதிரி ஒரு பதட்டத்துலேயே இருந்தா.

காலையில மொத வேலையா ஆபத்சகாயன் ரத்தினத்தை பாக்கணும்னு முடிவு பண்ணினா. பிரச்சனைய சொன்னோம்னா ’என்னால என்ன பண்ணமுடியும்..?’, ‘இதை ஏன் என்கிட்ட வந்து சொல்ற?’ன்னெல்லாம் ஜகா வாங்கற ஆளு அவன் இல்லன்னு அவளுக்குதான் நல்லா தெரியுமே.

எப்பவும் கோலம் போட்டு முடிச்சுட்டு துணி தேய்க்க ஆரம்பிக்கறவ, அன்னைக்கி அவனோட பட்டறை வாசல்லயே உக்காந்துட்டா. வழக்கம்போல, வேலை செய்ற பசங்க வந்து பட்டறைய தொறந்ததுக்கப்பறம் அரைமணிநேரம் கழிச்சு ரத்தினம் வந்தான். விஷயத்தை சொன்னா.

“அதான் பெரிய மனசு பண்ணி அவங்க இருக்கறவரைக்கும் இருக்க சொல்லியிருக்காங்கள்ல. அப்பறம் ஏன் இவ்ளோ கவலைப்படற? எதாச்சும் வழி பண்ணுவோம்”

விடியறப்ப இருந்த பயம் சடார்னு ஒரு நொடியில எறங்கி, பெருசா பெருமூச்சு வந்துச்சு அவளுக்கு.

ரத்தினம் ஒரே வாரத்துல ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டான். ஞாயித்துக்கெழமை பட்டறை லீவுங்கறதுனால அன்னைக்கி பசங்களை வர வச்சு, எதிர்த்தாப்ல இருந்த இடத்துல முள்ளையெல்லாம் க்ளீன் பண்ணினான். உபயோகப்படுத்தி கழட்டி போட்ட ஆஸ்பெஸ்டாஸ் பலகைங்களை காசு கம்மியா குடுத்து வாங்கிட்டு வந்து, இரும்பு பைப்புங்கள வலுவா ஊனி, கூரையா போட்டான். அதே சிமெண்ட் பலகைங்களை நாலாபக்கமும் செவுரு மாதிரி வச்சு கொஞ்சங்கூட எடைவெளி இல்லாம மறைச்சுக் குடுத்தான்.

“வார்டு எலக்ஷன் வரப் போவுது. எம்.எல்.ஏ, எம்.பியெல்லாம் ஓட்டு கேட்டு வருவாங்க. அந்த நேரம் பாத்து இந்த எடத்துக்கு பட்டா வேணும்னு கேட்டுப் பாரு”

பத்துக்கு பத்து எடம்தான்னாலும் அந்த வீட்டை அவளோட அரண்மனை மாதிரி அப்புடி ஒரு பூரிப்போட பாத்தா முத்துலட்சுமி. குமாருக்கும் சந்தோஷம் தாங்கமுடியல. வீட்டுக்குள்ள ஓடறதும் வெளில ஓடியார்றதுமா இருந்தான்.

செங்கமலம் கெழவியோட வீட்டை தாண்டி போவும்போது ரத்தினம் நின்னு அதை பாத்தான். வண்டியை நிறுத்தி சைடு ஸ்டாண்டு போட்டுட்டு திண்ணைல அதுக்கு பக்கத்துல போயி மெதுவா உக்காந்தான். இவன் எதுக்கு வந்து உக்கார்றான்னு அதுக்கு ஒண்ணும் புரியல.

“முத்துலட்சுமி தங்கறதுக்கு எடம் இல்லன்னு என் பட்டறைக்கி வந்து அழுதுச்சு. எதிர்த்தாப்லேயே நான்தான் ரெடி பண்ணி குடுத்துருக்கேன். இதுல ஒனக்கு எதாச்சும் சந்தேகம் இருந்தா இப்பவே என்கிட்டயே நேரா கேட்டுக்க. முத்துலட்சுமிகிட்டேயோ, ரோட்ல போறவங்க வர்றவங்ககிட்டேயோ இது விஷயமா எதுவும் கேக்கவேணாம்”ன்னான். கெழவிக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு.

10

கருப்பு கலர் மெட்டாடர் வண்டி தெருவுக்குள்ள வந்துச்சு. சைடுல ’அமரர் ஊர்தி’ன்னு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால எழுதியிருந்தது லேசா தெரிஞ்சுச்சு. பால்கனியில நின்னுகிட்டும் வாசல்ல இருக்கற பெரிய இரும்புக் கதவுங்கள லேசா நீக்கி வச்சுகிட்டும் பெரிய எடத்து பொம்பளைங்கள்லாம் சத்தம் இல்லாம வேடிக்கை பாத்துகிட்ருந்தாங்க.

சின்னப்பையன் மாதிரி இருந்த அந்த டிரைவரு, முத்துலட்சுமிய தாண்டிப் போயி வண்டிய ஓரங்கட்டி நிறுத்துனான். காக்கி சட்டை போட்ருந்த ரெண்டு பேரு முன்னால சீட்லேர்ந்து குதிச்சு எறங்குனாங்க. பனியனோட இருந்த ரத்தினம் பட்டறைய விட்டு வெளில வந்து, முத்துலட்சுமிகிட்ட வந்து நின்னு பாத்தான். மனசெல்லாம் என்னவோ மாதிரி இருந்துச்சு அவனுக்கு.

திரும்பி தெருவப் பாத்தான். வேன்ல வந்த காக்கி டிரஸ் ஆளுங்க இங்கேர்ந்து நடந்து தெருவுல இருக்கற மொத வீட்டுக்கு போயிருந்தாங்க. வீட்டு கதவுங்கள பலமா தட்டி, ‘அனாதப் பொணம் கொண்டு போறோம்மா. எதாச்சும் குடுங்க’ன்னு குரலு குடுத்துட்டு நின்னுகிட்டு இருந்தாங்க. இதையே வருசையா ஒவ்வொரு வீட்லயும் பண்ணிகிட்டே வந்தாங்க அவங்க.

எழுந்திரிக்க முடியாம படுத்த படுக்கையா கெடந்த செங்கமலம் கெழவி, பக்கத்துல கெடந்த அதோட குச்சிய எடுத்து தரையில தட்டி காக்கிங்கள கூப்ட்டுச்சு. சுருக்கு பைக்குள்ள கைய வுட்டு, தட்டு தடுமாறி பத்து ரூவாய எடுத்து நீட்டுச்சு.

கலெக்ஷனை முடிச்சுட்டு வந்த ஆளுங்க, பணத்தையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டு டிரைவர்கிட்ட குடுத்தாங்க. வாங்கி பக்கத்துல வச்சுட்டு, முத்துலட்சுமிய ஏத்திகிட்டு போறதுக்கு வசதியா வண்டிய திருப்பி நிறுத்துனான் அந்த பையன்.

’உசுரை காப்பாத்திக்கறதுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சம்பாதிச்சுகிட்டிருந்தவ நீ. உன்னை வச்சு எத்தனை பேரு எப்புடியெல்லாம் இப்ப சம்பாதிக்கறாங்க பாரு’ – மனசுக்குள்ள சொல்லிகிட்டான் ரத்தினம்.

வேன் கதவத் தொறந்து, ரெண்டு பக்கமும் கைப்புடி வச்ச நீள தகரத்தை எறக்கி முத்துலட்சுமிக்கு பக்கத்து-ல வச்சாங்க.

“ஏம்ப்பா, நடுவுல ஒரு கை போடு”

மாரிய பாத்து அவங்க சத்தம் குடுத்தாங்க. ஓட்டமும் நடையுமா வந்து அவங்க சொன்னத செஞ்சான். முத்துலட்சுமிய தூக்கி தகரத்துல படுக்க வச்சுட்டு, காக்கி சட்டைங்க ரெண்டும் ரத்தினத்தை பாத்துச்சு.

ரத்தினம் பசங்கள பாத்து கண்ணாலேயே ஜாடை காட்டுனான்.

அவன் குடுத்து வச்சுருந்த பணத்த எடுத்து ஆளுக்கு ஐந்நூறு ரூவாயா மூணு பேருக்கும் குடுத்தான் ஒரு பையன். திருப்தியா வாங்கிகிட்டு முத்துலட்சுமிய தூக்கி உள்ள தள்ளி கதவ அடிச்சு சாத்துனாங்க.

வண்டி கிளம்புச்சு.

’எந்த ஒரு உசுரும் தனக்கு தாங்கமுடியாத பிரச்சனைங்க வரும்போது எல்லார்கிட்டேயும் மனசு விட்டு உதவி கேட்டு வந்து நிக்காது. இவன்கிட்ட கேக்கலாம்னு மனசுல படறவன்கிட்ட மட்டும்தான் வந்து நிக்கும். அவனுக்குதான் மனுஷனுக்கான தன்மையும் தகுதியும் இருக்குன்னு அர்த்தம். எங்கேர்ந்தோ வந்து, அப்புடி ஒரு தகுதியை எனக்கு குடுத்துட்டு போறா இவ. இந்தத் தகுதி எப்பவும் எனக்குள்ள உசுரோட இருந்துகிட்டே இருக்கணும். மேல இருந்து என் புத்தி மாறிடாம என்னை நீ பாத்துக்கணும்’ – மனசுக்குள்ள அவளைப் பாத்து வேண்டிகிட்டான்.

வண்டி அந்த தெருவை வுட்டு போனதுக்கப்பறமும் அதே தெசைய பாத்து அப்புடியே நின்னுகிட்டு இருந்தான் ரத்தினம்.

அந்நேரம், அவனோட ஃபோன் அடிச்சுச்சு. புதுசா எதோ ஒரு நம்பரு. பேச மனசு இல்லாம பசங்ககிட்ட குடுத்தான். கொஞ்சம் தள்ளிப் போயி சத்தம் இல்லாம பேசுன பையன், ரத்தினத்துகிட்ட திரும்ப வந்தான்.

“அண்ணேன், சுடுகாட்லேர்ந்து வெட்டியான் பேசறாப்ள. அந்தாளுக்கும் சேர்த்து காசு குடுத்து விட்ருக்கீங்களான்னு கேக்கறாப்ள.”

”அய்யய்யோ.. ஞாபகம் இல்லாம போச்சு பாரு. போ. வண்டிய எடுத்துகிட்டு சீக்கிரமா போயி குடுத்துட்டு வந்துரு”ன்னு சொல்லிகிட்டே, பணத்த எடுத்து குடுக்கறதுக்காக பட்டறைக்குள்ள போனான் ரத்தினம்.

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்