தெனாலி ராமன் கதைகள்

காளியிடம் வரம் பெற்ற கதை || Thenali raman story


சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.

“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.

“தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.

” உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?”

“ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்.” என்றான் இராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

“இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி” என்றாள் புன்னகையுடன்.

இராமன் ” என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே” என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

“நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!”

“ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்.” என்றான்.

“ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?”

“கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!”

காளி புன்னகை புரிந்தாள். “இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்.” என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.

இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

Thenali raman story

ராஜகுருவின் நட்பு || Thenali raman story

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் “சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.

தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா…… மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்