நட்பு கதைகள்

இரண்டு நண்பர்களின் நட்பு கதை || Friendship story

‘ராம் ரவி’ என இரு நண்பர்கள். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். 20 வருடங்களாகப் பக்கத்து பக்கத்து வீடு. பள்ளி முதல் கல்லூரிவரை ஒன்றாகப் படித்து வந்தனர். ரவிக்கு யாரும் இல்லை. அவன் சிறு வயதில் ஒரு விபத்தில் அவன் குடும்பத்தினர் இறைவன் அடி சேர்ந்தனர், ரவி மட்டும் தப்பித்தான். ராமின் குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து வந்தான். கடைசி வரை உடன் இருப்பதாக இருவரும் தங்களுக்குள்ளே சத்தியம் செய்துக் கொண்டனர்.

எந்த நேரமும் ஒன்றாகச் சுற்றுவார்கள் எல்லா செயல்களையும் ஒருவருக்கொருவர் உதவிச் செய்து முடிப்பர். ஒருவருக்கு பிரச்சனை வந்தால் அதைத் தன் பிரச்சனைபோல முன் நின்று எதிர்கொள்வார் மற்றொருவர்.

இவர்களின் நட்பைக் கண்டு வியந்து போகாதோர் அந்த ஊரில் இல்லை. இருவருமே தங்களின் நட்பைக் கண்டு பெருமிதம் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் தான் அவர்களின் வீட்டிற்கு அருகே குடி வந்தான் ஆகாஷ். இவர்களின் நட்பைக் கண்டு அவனும் வியந்தான். தன்னையும் அவர்களுள் ஒரு நண்பனாகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டான்.

ஆரம்பத்தில் இரு நண்பர்களும் சற்று தயங்கினாலும், தங்கள் நட்பின் மீது உள்ள நம்பிக்கையால், ஆகாஷின் நட்பு அவர்களின் உறவுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்பினர். ஆகாஷும் அவர்கள் பயின்ற அதே கல்லூரியில் சேர்ந்தான். மூவரும் நல்ல நண்பர்களாகினர். வருடங்கள் ஓடின.

ஒரு நாள் சின்ன வேலையாக ராமும் ரவியும் பக்கத்து ஊர்வரை காரில் சென்றனர். கனமழைப் பெய்துக் கொண்டிருந்தது. ராம் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் ரவி அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். திடீரென அவர்களின் இடது பக்கம் வெளிச்சம். கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைப் பலமாக மோதித் தள்ளியது ஒரு லாரி. இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பதறி அடித்துக் கொண்டு அவர்களைக் காண ஓடி வந்தான் ஆகாஷ்.

அடுத்த நாள் காலை ராம் கண் விழித்தான். கையிலும் முகத்திலும் பலத்த காயம். தன் நண்பனுக்கு என்ன ஆனதோ எனத் தேடிச் சென்றான். ரவிக்கு காயங்கள் குறைவு ஆனால் கண் பார்வை பறிப்போகிய நிலையில் இருந்தான். ராமிற்கு மிகுந்த வருத்தம் எனினும் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ந்தான். ரவியை உடனிருந்து கவனித்துக் கொண்டான். வருடங்கள் ஓடியது.


ராம் முன்னர் ரவியுடன் அதிகம் நேரம் செலவிட்டதைப் போல இப்பொழுது இல்லை. அவனுக்காக அனுதாபப் பட்டு உதவிய காலம் மாறிப் போனது. ராம் தனது வேலைகளில் அதிக கவனம் செலுத்தினான். ஆகாஷுடன் வெளியே சுற்றினான். ரவியை வாரம் ஒரு முறை வந்து கவனித்துக் கொண்டான்.

வாரம் மாதம் ஆனது. மாதம் ஒரு முறை ரவியுடன் பேசினான். இது ரவியின் மனதிற்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தனக்கென்று இருந்த ஒரே உறவும் முடியும் நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. இந்த வருத்தத்தால் சரியாக உண்ணாமல் கவனிக்க யாருமின்றி நோய் வாய் பட்டு இறந்தான்.

ரவியின் இறப்பு ராமிற்கு சிறிது வேதனை அளித்தாலும், முன்னர் இருந்ததுப்போல நெருக்கம் இல்லை. அவன் கண் பார்வை இழந்ததும் அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிச் சென்றவன் இன்று ‘முன்னாள் நண்பன்’ எனப் பேருக்கு இறப்பில் கலந்துக் கொண்டான்.

ரவியின் இறப்பிற்கு பெரியவர் ஒருவர் வந்திருந்தார். கூட்டத்தில் யாரையோ தேடிக் கொண்டிருந்தார். நேராக ஆகாஷிடம் வந்து, ‘ நீதான் ரவியின் நண்பன் ராம் என்பவனா?’. ஆகாஷ், ‘ இல்லை சார். அதோ அவன் தான் ராம்’ என ராமை கைக்காட்டினான்.

நேராக ராமை நோக்கி நடந்த பெரியவர், ‘நீதானே ராம்?’. ராம், ‘ஆமாம் சார்’. பெரியவர்,’ இந்தக் கடிதம் உனக்கு ரவி எழுதியது. அவன் இறக்கும்போது உன்னிடம் தரக் கூறினான். ஆனால், இவ்வளவு விரைவாக அவன் இறப்பானென நான் நினைக்கவில்லை’ எனக் கண்களில் ஓரம் வடிந்த நீரை துடைத்தப் படி சென்றார்.

வியப்போடு கடிதத்தைப் பிரித்துப் படித்தான். ‘ நண்பா! உன் நட்பின் அரவணைப்பில் வளர்ந்த எனக்குத் தாய் தந்தை இல்லா ஏக்கத்தைப் போக்கியவன் நீ. உனக்கும் நம் குடும்பத்தினருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன். நம் நட்பிற்கு என் நன்றியைக் காட்டும் நேரம் இது என உணர்கிறேன். விபத்தால் உன் கண் பார்வையை நீ இழந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. வாழ்க்கை முழுவதும் நீ கஷ்டப்படுவதை என்னால் காண இயலாது. அதனால் உன்னைக் கேட்காமல் ஒரு முடிவு எடுத்து விட்டேன். இதை உன்னிடம் கூறினால் நீ வருத்தபடுவாய் எனவே என் இறப்பிற்கு பின் இதை நீ அறிந்துக் கொள்கிறாய். என் கண் பார்வை போகப்போவதை எண்ணி எனக்கு வருத்தமில்லை; என் நண்பன் நீ இருகிறாய்! நான் கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என்ற சத்தியத்தை நிறைவேற்றி விட்டேன். நான் இறந்தாலும் என் கண்கள் மூலமாக உன்னுடன் என்றும் இருப்பேன்.’ 

கண்களில் நீர் வழிய இறந்த தன் நண்பனைக் கட்டி அணைத்தபடி கதறி அழுதான் ராம்.

Friendship story

விலங்குகளின் நட்பு || Friendship story

ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மான் தூரத்திலிருந்து வேகமாக ஓடிவந்தது. திடுக்கிட்ட ஆமை அருகில் உள்ள குளத்தில் மூழ்கிவிட்டது. எலி தன் பொந்தில் நுழைந்துகொண்டது. காகமோ யாரேனும் வேடன் வந்துள்ளானா என வானில் வட்டமடித்துப் பறந்து பார்த்தது.
வேடன் வந்ததற்கான அடையாளம் எதுவும் அருகில் இல்லாததால் காகம், எலியையும் ஆமையையும் அழைத்தது. அவை இரண்டும் வெளியே வந்தன.

களைத்துப் போயிருந்த மான் பயத்துடன் குளத்தில் தண்ணீரை குடிக்க நினைத்தது. ஆமை மானிடம் “பயப்படாதே! இங்கு உனக்கு ஆபத்து இல்லை’ எனக் கூறிய பிறகு “எங்கிருந்து வருகிறாய்?’ என விசாரித்தது.

“”இந்தக் காட்டில்தான் எனக்கான இரையைத் தேடிக் கொள்கிறேன். ஒவ்வொரு இடத்திலிருந்தும் வேடனின் அம்புகள் என்னை மற்றொரு இடத்திற்கு துரத்திக்கொண்டே இருக்கின்றன. இன்று தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது வேடனோ என பயந்து நான் ஓடி வந்தேன்” எனக் கூறியது மான்.

அதற்கு ஆமை, “”பயப்படாதே! இங்கு இதுவரை நாங்கள் வேடனைப் பார்த்ததே இல்லை. இது இயற்கை வளமும் உனக்கான இரையும் நிறைந்த பகுதி. எனவே எங்களுடனேயே நீ தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்” என்றது.

மானும் அவைகளுடன் தங்க சம்மதித்தது. மூவருடனும் மான் நண்பனாக ஆனது. நால்வரும் ஒன்று கூடிப் பேச அங்கு கூடாரம் ஒன்று இருந்தது.

ஒருநாள் அந்தக் கூடாரத்தில் காகம், எலி மற்றும் ஆமை ஒன்றாய் பேசிக் கொண்டிருந்தன. மானை மட்டும் காணவில்லை. சிறிது நேரம் இவை எதிர்பார்த்த பிறகும் வரவில்லை. எனவே மிகவும் தாமதமானதால் மானிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவை பயந்தன.

காகத்திடம் எலியும், ஆமையும் “”நீ சென்று என்ன நடந்தது என்று பார்த்து வா” எனக் கூறின.

காகம் வானத்தில் வட்டமடித்துப் பார்த்த போது மான் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே அதை காகம் மற்ற இருவரிடமும் கூறியது. அவை மிகவும் கவலைப்பட்டன.

ஆமையும் காகமும் எலியிடம் “”இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற உன்னால்தான் முடியும். எனவே உன் நண்பனுக்காக உதவி செய்” எனக் கூறின.

எலி வேகமாக, மான் வலையில் மாட்டிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றது. மானிடம் “”நீ தான் புத்திசாலியாயிற்றே! பிறகு எப்படி இந்த வலையில் வீழ்ந்தாய்?” எனக் கேட்டது.

அதற்கு மான் “”ஏதோ கவனக்குறைவால் நேர்ந்துவிட்டது” என்றது.

இரண்டும் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆமையும் அங்கு வந்தது. இதனைப் பார்த்த மான், “”நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் பக்கத்தில் வேடன் வந்துவிட்டால் எலி என் வலையை துண்டித்துவிடும். நான் ஓடிவிடுவேன். எலி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஏராளமான பொந்துகள் உள்ளன. காகமும் வானில் பறந்துவிடும். ஆனால், உன்னாலோ வேகமாகக் கூட செல்ல முடியாது. உன்னைப் பற்றித்தான் எனக்கு பயமாக உள்ளது” என்றது.

இதைக் கேட்ட ஆமை, “”நண்பர்களைப் பிரிந்து வாழ்கிற வாழ்வு வாழ்வே இல்லை. ஒரு நண்பனை விட்டு மற்றொரு நண்பன் பிரிந்துவிட்டால் உள்ளத்திலிருந்து நிம்மதி பறந்துவிடும். சந்தோஷம் என்பதே இருக்காது” என்று கூறி முடிப்பதற்குள் வேடன் வந்துவிட்டான்.

வேடன் வந்த மறுகணம் வலையை எலி துண்டித்தது. மான் தப்பியோடியது. காகம் பறந்துவிட்டது. எலி ஒரு பொந்தில் நுழைந்து விட்டது. ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை.

வேடன் வலையின் பக்கத்தில் வந்து அது துண்டிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு கண்ணுக்கு தெரியவில்லை. எனவே அதனைக் கட்டி எடுத்துச் சென்றான்.

வேடனின் கைகளில் ஆமை பிடிபட்டதைப் பார்த்த எலி, மான் மற்றும் காகம் மிகவும் கவலைப்பட்டன. எலி, “”ஒரு ஆபத்திலிருந்து தப்பிப்பதற்குள் அதனை விட பெரிய ஆபத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோமே. இதனைத்தான், “ஒருவன் தடுமாறுகிற வரை முன்னேறிச்சென்று கொண்டேயிருப்பான். ஒருமுறை தடுமாறி விழுந்துவிட்டால் அவன் கட்டாந்தரையில் நடந்து சென்றாலும் தடுக்கி விழுந்துகொண்டே இருப்பான்’ என்று கூறுவார்கள் போலும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் தூய நட்பு கொண்ட ஆமையை எப்படிக் காப்பாற்றுவது?” என்று புலம்பியது.

மானும், காகமும் எலியிடம், “”இப்படிப் புலம்புவதால் ஆமையை காப்பாற்றி விட முடியாது. ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன் என்பார்கள். அதுபோல் ஆபத்தில் சிக்கியிருக்கும் ஆமையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்” என்றது.

சிறிது நேரம் யோசித்த எலி, “” மானே! நீ ஒரு தந்திரத்தை கையாள வேண்டும். நீ சென்று காயமுற்றதைப் போல் வேடன் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் படுத்துக்கொள். காகம் உன்னை உண்ண முயல்வது போல் உன் மீதுஅமர்ந்து கொள்ளும். நான் வேடனை கண்காணித்துக் கொள்கிறேன். அவன் ஆமையை கீழே வைத்துவிட்டு உன்னை அடைய அம்புடன் தயாராவான். உன் அருகில் அவன் வந்தால் நீ எழுந்து கொஞ்ச தூரம் ஓடு. பிறகு மீண்டும் இயலாததைப் போன்று படுத்துக்கொள். இவ்வாறே அவனை எங்களை விட்டும் தூரமாக அழைத்துச் சென்றுவிடு. அவன் திரும்பி வருவதற்குள் நான் ஆமையைக் காப்பாற்றி விடுகிறேன்” எனக் கூறியது.

காகமும், மானும் எலி கூறியதைப் போன்றே செய்தன. அவை இரண்டின் பின்னாலேயே வேடனும் சென்றான். ஆமையை விட்டு விலகி தூரத்திற்கு அவனை மான் இழுத்துச் சென்றது. எலி, ஆமையைக் காப்பாற்றியது.

களைப்படைந்த வேடன் நிராசையாகி திரும்பினான். ஆமை இருந்த வலை துண்டிக்கப்பட்டதை பார்த்தான். நடந்த நிகழ்வுகளை எல்லாம் வைத்து “”இது ஏதோ மாய மந்திரங்கள் நிறைந்த காடு” என எண்ணினான். “இனி இங்கு வரமாட்டேன்’ என தனக்குத் தானே கூறிக்கொண்டு ஓடிவிட்டான்.

காகம், மான், எலி மற்றும் ஆமை ஆகியவை தமது கூடாரத்தை நோக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பின.
Friendship story
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்