ஒரு அரசன் தன் பற்கள் அனைத்தும் உதிர்ந்து பொக்கைவாயுடன் இருப்பது போல் கனவு கண்டான். இதனால், அந்தக் கனவின் பின்விளைவுகளுக்குப் பயந்து காலையில் பீதியுடன் எழுந்த அவர், முதலில் ஜோதிடரை அழைத்தான். நாடி ஜோதிடர் ஒருவர், தனது ஓலைச்சுவடியை எடுத்து அதில் பற்கள் விழுந்து பொக்கையாவது பற்றிய ஓலைச்சுவடியை படித்துவிட்டு, அரசே! உன் மனைவி, பிள்ளைகள், உனது உறவுகள் எல்லாரும் உனக்கு முன்பே இறந்துவிடுவார்கள் என்றான். அரசன் உடனே கடும் கோபமடைந்து அவனைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டார்.
அதன் பிறகும் அரசனின் மனம் திருப்தியடையவில்லை. வேறொரு நாடி ஜோதிடரை வரவழைத்து அவரிடம் தன் பொக்கைவாய் கனவை பற்றி கூறி அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதை பார்த்துவிட்டு அரசே! உங்கள் சொந்த பந்தங்களைவிட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று கூறினான்.
இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் ஒரே மாதிரியான ஓலையைத்தான் படித்தார்கள். ஒரேய விஷங்களை தான் சொன்னார்கள். ஒருவர் எல்லாரும் இறந்துவிடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்.அவ்வளவுதான் வித்தியாசம்.
நீதி: பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்.