நீதி கதை

அரசனின் பேராசை! || The king’s greed

அது ஒரு அழகான ராஜ்ஜியம். ஒரு தனி தீவு போல
சுற்றிலும், அருவி, ஆறு, மரம், செடி, கொடிகள் என
பசுமையாய் இருந்தது. அதை அரசர் ஒருவர் ஆட்சி செய்து
வந்தார். அந்த ஊர் செழிப்பாக இருக்க மக்களும்
காரணமாக இருந்தார்கள். தங்களை சுற்றி இருந்த
இயற்கையை நன்றாக பேணி காத்தார்கள். அங்கு ராஜு
என்ற சிலை வடிவமைப்பாளர் இருந்தார். அரசருக்கு அவர்
செய்யும் சிலைகள் மேல் தனி பிரியம் உண்டு.
ராஜு மற்ற ராஜ்ஜியத்தில் இருந்து வரும்
மாணவர்களுக்கும் சிலை வடிக்க கற்று கொடுப்பார்.
ஆனால் அதற்கு ஒரு விதியை வைத்திருந்தார். அவர்கள்
செய்யும் கற்சிலையோ, மர சிலையோ எதுவாகினும்
அவர்களது ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்து வரவேண்டும்.
மேலும் மீதமாவதை எடுத்து செல்ல வேண்டும். இதில்

நன்றாக பயின்று யார் சிறப்பாக செய்கிறார்களோ
அவர்களுக்கு இந்த ராஜ்ஜியத்தில் இருந்து பொருட்கள்
வழங்கப்படும். அது அரசரின் மாளிகையை அலங்கரிக்கும்
என்று கூறி இருந்தார்.
பலருக்கும் இதில் உடன்பாடு இல்லை. அதனால் இவருக்கு
மாணவர்கள் குறைவாகத்தான் வந்தார்கள். இவர்களது
ராஜ்ஜியத்திற்கு வரவேண்டுமெனில் ஆற்றை கடந்துதான்
வரவேண்டும். அதனால் இதையெல்லாம் சுமந்து
வரவேண்டும் என்பதாலே பலர் வர மறுத்தார்கள். இதை
கேள்விப்பட்ட அரசர், ராஜூவை காண வந்தார்.
அப்போது அரசர், ராஜுவிடம் உங்கள் திறமை இன்னும்
பலருக்கு செல்லும் இல்லையா என்று கேட்க, நமது
வளங்களை அவர்கள் பழகுவதற்கு கொடுத்தால், நாளை
நமது இந்த தீவு அதன் அழகை இழக்கும் என்றான்.
அரசரும் அதை ஆமோதித்து சென்றார். நாட்கள் ஓடின
அரசருக்கு வயதானது. ஒரு நாள் அரசர் இறந்தும் போனார்.
பின்னாளில் அவரது மகன் அரசர் பட்டத்தை சூடினான்.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. அப்போது
ஆற்றின் ஒரு கரையில் மாணவர்கள் சிறிய பாறைகள்,
மரத்துண்டுகளை வைத்து கொண்டிருப்பதை பார்த்தார்.
தனது அமைச்சரிடம், அவர்கள் ஏன் நமது ராஜ்ஜியத்திற்கு
இதை எடுத்து வருகிறார்கள், நம்ம தீவில் இல்லாததா, ஏன்
மாணவர்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்றார். ராஜு
தான் இப்படி ஒரு விதிமுறை வைத்துள்ளார், உங்கள்
அப்பாவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்
அமைச்சர். உடனடியாக ராஜூவை தேடி சென்றார் அரசர்.
விதிமுறையை மாற்ற சொன்னார், ராஜுவோ அதனால்
நமது தீவின் இயற்கை அழியும் என்றான். அரசரோ
மாணவர்கள் அதிகமாக வந்தால், நாட்டின் கஜானா
பெருகும். மேலும் அவர்கள் செய்யும் சிலைகள் அனைத்தும்
நமது அரசவையில் வைக்கலாம் என்றார். ராஜு முதலில்

மறுத்தான். அரசரோ உனக்கிருக்கும் திறமைக்கு
அவர்களிடம் அதிகமாக வருமானம் ஈட்டலாம். அதனால்
நாட்டிற்கு வரிப்பணம் அதிகமாக கிடைக்கும். இதை நீ
செய்யவில்லை என்றால், யாருக்கும் வகுப்பு எடுக்க கூடாது
என உத்தரவிட்டார். ராஜுவோ வேறு வழியில்லாமல்
ஒத்துக்கொண்டான். அழகான அந்த தீவுகளில் இருந்து
இதற்காக மரங்கள் வெட்டப்பட்டன. பாறைகள்
குடையப்பட்டன. மாணவர்கள் கற்று சேதமாகும்
குப்பைகள் ராஜ்ஜியத்தில் நிறைந்தன. அழகான ஆறு
குப்பையாக மாற ஆரம்பித்தது. மலைகள் குடைந்ததால்
அருவியில் நீர் வரத்து நின்றது. அழகிய தீவு வறண்டு போக
ஆரம்பித்தது. ஆனால் அரசரோ வரிப்பணத்தை வாங்கி
கொண்டார். சிலைகளை அரசவையில் குவித்தார். எங்கு
பார்த்தாலும் சிலைகளாகவே காட்சியளித்தன. ராஜ்ஜியம்
வறுமையில் வாட துவங்கியது. மக்கள் மற்ற ராஜ்ஜியத்தை
நோக்கி பயணிக்க தொடங்கினர். அரசர் கஜானா
நிரம்பியதால் நாட்டின் இயற்கையை இழந்தார்.
மேற்கொண்டு வெட்ட மரம் இல்லாமல், பாறைகள்
இல்லாமல் மாணவர்கள் வருவதை நிறுத்தினர். தனது
பேராசையால் ராஜ்ஜியத்தை இழந்ததை எண்ணி
வருந்தினார் அரசர்.

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்